‘35 ஆண்டுகள் நேசித்த காங்கிரஸில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன்’ பாஜகவுக்கு தாவிய தீவிர விசுவாசி தஜிந்தர் சிங்

தஜிந்தர் சிங் - பிரியங்கா காந்தி
தஜிந்தர் சிங் - பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் நீண்டகால விசுவாசிகளில் ஒருவரும், பிரியங்கா காந்தியின் தீவிர ஆதரவாளருமான இமாச்சல் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளரான தஜிந்தர் சிங் இன்று பாஜகவுக்கு தாவினார்.

பழம்பெரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் தீவிர விசுவாசிகள் பாஜகவுக்கு தாவும் போக்கு அதிகரித்து வருகிறது. அதிலும் மூன்றாம் முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் உறுதி செய்ததை அடுத்து பல முக்கியத் தலைகள் பாஜகவுக்கு தாவி வருகின்றனர்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தளவில் அதிகாரம் இல்லாவிடில் அஸ்தமனம் என்ற போக்கே தற்கால அரசியலில் பரவலாக தென்படுகிறது. கடந்த இரு தேர்தல்களிலும் தோல்வியடைந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்திருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து, சிறுதும் பெரிதுமாக தலைவர்கள் வெளியேறி வருகின்றனர்.

பாஜகவில் இணைந்த தஜிந்தர் சிங்
பாஜகவில் இணைந்த தஜிந்தர் சிங்

தற்போது மூன்றாம் முறையாகவும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர வாய்ப்பில்லை என்ற அனுமானத்தில், இந்த தாவல் போக்குகள் அதிகரித்து வருகின்றன. தேர்தல் தருணத்தில் பாஜகவும் வந்தவரை லாபம் என தாவல் திலகங்களை வரவேற்று அரவணைத்து வருகிறது. இந்த வகையில் லேட்டஸ்ட் விக்கெட்டாக விழுந்திருக்கிறார் தஜிந்தர் சிங் பிட்டு.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இமாச்சலப் பிரதேசத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருக்கும் தஜிந்தர் சிங், கட்சியின் 35 ஆண்டுகால விசுவாசி என்றளவில் பரவலாக அறியப்பட்டவர். காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியின் நெருங்கிய உதவியாளராகவும் பிரபலமானவர். இந்த வகையில் கட்சியில் செல்வாக்கோடும் வலம் வந்திருக்கிறார்.

ஆனால் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து விடுபடுவதாக அறிவித்தவர், அதே வேகத்தில் பாஜகவில் சென்று சேர்ந்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேக்கு அனுப்பிய விலகல் கடிதத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கும் தஜிந்தர் சிங், "இந்திய தேசிய காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும், இமாச்சலப் பிரதேசத்தின் இணைப் பொறுப்பாளர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். 35 ஆண்டுகளாக நேசித்த காங்கிரஸ் கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியுடன் தஜிந்தர் சிங்
ராகுல் காந்தியுடன் தஜிந்தர் சிங்

மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு பரபரப்புகளுக்கு மத்தியில் தஜிந்தர் சிங்கின் கட்சித் தாவல் குறித்து அனுமானங்கள் அதிகரித்திருந்தன. காங்கிரஸ் மேலிடம் அவரை சமாதானப்படுத்த தயாரான சூழலில், தஜிந்தர் சிங் பாஜகவில் இணைந்தது குறித்த செய்திகள் வெளியாகின. இவருடன், மறைந்த ஜலந்தர் எம்பி சந்தோக் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் சவுத்ரியும் பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த ஆண்டு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின்போது, அவரது கணவரும் இரண்டு முறை ஜலந்தர் எம்பியுமான சந்தோக் சிங் சவுத்ரி பரிதாபமாக இறந்தார். ஆனால் ஜலந்தர் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை வேட்பாளராக நிறுத்தியதற்காக கரம்ஜீத் கவுர் காங்கிரஸ் தலைமையிடம் அதிருப்தி கொண்டார். ”விசுவாசம் எங்கள் இரத்தத்தில் உள்ளது. ஆனால் நாங்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறோம்” என்று அவர் வருத்தம் பகிர்ந்திருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in