‘இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவி உள்ளதா?’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுப்பிரமணியன் சுவாமி எழுப்பிய கேள்விக்கு பதில் கிடைக்காததால், தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தை அவர் அணுகி உள்ளார்.
அரசியல் அதிரடிகளுக்கு பேர் போன சுப்பிரமணியன் சுவாமி தற்போது பாஜகவில் உள்ளார். ஆனால் தன்னை மதிக்காத மற்றும் கௌரவிக்காத பாஜகவை தர்மசங்கடத்தில் தள்ளும் நடவடிக்கைகளை தொடர்ந்து சுப்பிரமணியன் மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசின் கொள்கை முடிவுகள் முதல் மோடியின் அரசியல் நிலைப்பாடு வரை சுவாமி குற்றச்சாட்டுகள் நீள்வதுண்டு. இந்த வரிசையில் சுப்பிரமணியன் சுவாமியின் புதிய குண்டு, ’லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறதா’ என்ற ஐயம் தொடர்பாக வெடித்திருக்கிறது.
லடாக்கில் இந்திய இறையாண்மைக்குரிய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்பது குறித்து தகவல் தருமாறு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்தாண்டு சுப்பிரமணியன் சுவாமி கோரியிருந்தார். ஆனால் இதுவரை சுவாமியின் கோரிக்கைக்கு பதில் கிடைக்காது போகவே, டெல்லி உயர் நீதிமன்றத்தின் படிகளில் அவர் ஏறியிருக்கிறார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சுப்பிரமணியன் சுவாமி ’2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் லடாக்கில் சர்ச்சைக்குரிய இந்தியப் பகுதியை சீனத் துருப்புக்கள் கைப்பற்றியதா இல்லையா என்பது குறித்த எனது ஆர்டிஐ கேள்விக்கு பதிலளிக்குமாறு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரசாத், மோடி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.
சுவாமி தனது ஆர்டிஐ மனுவில், ’சர்ச்சை பகுதியில் 2014-ம் ஆண்டு முதல் இந்தியா தனது இறையாண்மை நிலத்தில் எவ்வளவு இழந்துள்ளது என்பதை அறியவும், 1996-ம் ஆண்டிலிருந்து பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே இந்தியப் பகுதியின் மீது சீனாவின் ராணுவ ஊடுருவல்கள் குறித்தும்’ பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
ஆர்டிஐ கோரலில், சுவாமி தனது இரண்டாவது மேல்முறையீட்டை தாக்கல் செய்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகும், எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், தான் கோரிய தகவலை மறுப்பது இந்திய அரசியலமைப்பின் உரிய பிரிவுகளை மீறுவதாகும் எனவும் நீதிமன்ற மனுவில் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டிருக்கிறார்.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி மாதம் வர இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!