புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!

மதுக்கடை
மதுக்கடை

கர்நாடகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அழுத்தம் கொடுத்து வருவது தெரியவந்துள்ளது.

கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 5 முக்கிய இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மாநிலத்தில் மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தி இருந்தது. இந்த சூழலில் மதுபானம் மூலம் கூடுதல் வருவாய் திரட்டுவதற்காக பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்களிலும், கிராமப்புறங்களிலும் புதிய மதுக்கடைகளை அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கு முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் புதிதாக மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். ஆனால் சரியான இடங்களை தேர்வு செய்து புதிய மதுக்கடைகள் திறக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறி இருந்தார்.

சிவக்குமார் சித்தராமையா
சிவக்குமார் சித்தராமையா

இதனால் மாநிலத்தில் புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கும் விவகாரத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் மாநிலத்தில் புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்காததால், ஏற்கனவே மதுக்கடைகள் திறக்க உரிமம் பெற்றவர்கள் அதிக அதிக லாபம் அடைந்து வருவதாகவும், புதிய மதுக்கடைகள் திறந்தால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று டி.கே.சிவக்குமார் கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பெங்களூரு உள்பட பிற பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கினால், ஊழல், பிற முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், இது மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று முதல்வர் சித்தராமையா கருதுவதால், அதனை நிராகரித்து வருவதாகவும் தெரிகிறது.

மதுக்கடை
மதுக்கடை

இந்த நிலையில், புதிய புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வற்புறுத்தி அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை போன்று எதிர்க்கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களும் புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கும்படி சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி கலால்துறை மந்திரி ஆர்.பி. திம்மாபூர் பேசுகையில், “மாநிலத்தில் புதிதாக மதுக்கடைகள் திறக்கும் முடிவு அரசிடம் இல்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி முதல்வர் சித்தராமையா கூட தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படாது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in