சிவகங்கையும் சிதம்பரமும்... 28

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை
மேடையில் ஏலம்மாள்...
மேடையில் ஏலம்மாள்...

சிவகங்கை வட்டார காங்கிரஸ் செயலாளராக இருந்தவர் பெரியவர் மலைச்சாமி. இவரது மகன் ராஜேந்திரன். இவர் காங்கிரஸ் கட்சி பேச்சாளர். இவரது மனைவி ஏலம்மாள்.

மலைச்சாமி
மலைச்சாமி

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக மலைச்சாமி தான் தனது மருமகள் ஏலம்மாளை கட்சியில் சேர்த்து உறுப்பினர் அட்டை வாங்கிக் கொடுத்தார். தனது கடுமையான பணிகளால் சிவகங்கை நகர மகிளா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்னேறுகிறார் ஏலம்மாள். அந்தப் பொறுப்பில் மூன்றாண்டுகள் அவர் செய்த களப்பணிகளைப் பார்த்துவிட்டு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை கூப்பிட்டுக் கொடுத்தது கட்சித் தலைமை.

அன்புத் தலைவர் சிதம்பரம், இளைய நிலா கார்த்தி சிதம்பரம் கைதுகளின் போதும், உபி அரசால் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட போதும் வீதிக்கு வந்து போராடி எதிர்ப்பைக் காட்டியவர் ஏலம்மாள். காளையார்கோவிலில் மகிளா காங்கிரஸ் மாநாட்டையும் நடத்தி பேர்வாங்கிய ஏலம்மாள், கரோனா காலத்தில் மக்களுக்கு தன்னாலான உதவிகளையும் செய்திருக்கிறார்.

களத்தில் ஏலம்மாள்...
களத்தில் ஏலம்மாள்...

இந்த நிலையில், ஏலம்மாளுக்கு கட்சிக்குள்ளேயே சில சங்கடங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆரம்பத்திலேயே அழைத்துப் பேசி சமரசம் செய்திருந்தால் பிரச்சினையை சுமூகமாக முடிந்திருக்கலாம். ஆனால், அப்படி யாரும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, ஏலம்மாளின் பிரச்சினையை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதிலேயே சிலர் குறியாய் இருந்தார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற மகிளா காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று வந்த கொஞ்ச நாளில் மகிளா காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ஏலம்மாள் நீக்கப்படுகிறார். இதனால் ஆத்திரப்பட்ட ஏலம்மாள், தனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் திட்டமிட்டு தனது பதவியை பறித்துவிட்டதாகச் சீறுகிறார். விவகாரம் போலீஸ் வரைக்கும் போனதால் மாவட்ட காங்கிரஸ் தலை ஒருவர், காவல்துறை உயர் அதிகாரிகளை போனில் அழைத்து, ஏலம்மாள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார். ஆனால், ”அப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது” என்று மறுத்துவிடுகிறது காவல்துறை. இதற்கிடையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் அண்ணன் கே.ஆர்.ராமசாமியின் படத்தைப் பெரிதாகப் போட்டு மாவட்டம் முழுக்க ஐந்து நாட்களுக்கு முன்பாக போஸ்டர்களை ஒட்டுகிறார் ஏலம்மாள். சிவகங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் சுவற்றிலும் இந்த போஸ்டர் ஒட்டப்படுகிறது. ஏலம்மாளைப் பற்றி அனைவருக்கும் நன்றாகவே தெரியும் என்பதால் இந்த போஸ்டரைக் கிழித்துப்போடக்கூட அவர்களில் யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

“ராகுல் காந்தியின் படமும் அந்த போஸ்டர்ல இருந்துச்சு... அதனாலதான் கிழிக்க முடியல” என்று சிலர் சொன்ன சால்சாப்புக் காரணங்கள் எல்லாம் அங்கு எடுபடவில்லை. போஸ்டரைக் கிழிக்காமல் விட்ட நிர்வாகிகள் பலருக்கும் ‘பாராட்டு’ மழை கொட்டியது.

குறிப்பிட்ட இந்த அத்தியாயத்தில் மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்ரீவித்யா கணபதி பற்றி சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளன. அப்பழுக்கற்ற ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து பொதுவாழ்க்கைக்கு வந்து தனது கணவர் கணபதியின் முழுமனதான ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வரும் தான், பொதுமக்களுக்கு குறிப்பாக, பெண்கள் சமுதாயத்திற்காக தன்னால் இயன்ற சேவைகளைச் செய்துவருவதாக தெரிவித்துள்ள ஸ்ரீவித்யா கணபதி, அப்படிப்பட்ட தனது உற்சாகத்தையும் மன தைரியத்தையும் குலைக்கும் விதமாக இதுபோன்ற செய்தி அமைந்துவிட்டதாக வேதனையுடன் நமக்குச் சுட்டிக்காட்டி இருந்தார். இந்தக் கட்டுரையில் அவரைப்பற்றி சொல்லப்பட்டிருந்த செய்திகளால் அவரது மனம் புண்பட்டிருப்பதை எங்களால் முழுமையாக உணர முடிகிறது. எனவே, குறிப்பிட்ட அந்தப் பகுதியை நீக்கியிருப்பதுடன், அந்தச் செய்தி இடம்பெற்றமைக்காக எங்களின் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஆசிரியர்

(ஒரு காலத்தில் காங்கிரஸ் என்றாலே, ரிட்டையர்டு கேஸ்களின் கட்சி என்று சிலர் கிண்டலடிப்பார்கள். அந்த சமயத்தில், கல்லூரி மாணவர்களை காங்கிரஸ் களத்துக்கு அழைத்து வந்தவர்... தனது குடும்பத்தில் அத்தனை பேருக்கும் அன்புத் தலைவர் சிதம்பரம் என்றால் வேப்பங்காயாய் கசந்த போதும் தான் மட்டும் தலைவர் சிதம்பரம் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தவர். அடுத்து அவரது கதையைப் பேசுவோம்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மேடையில் ஏலம்மாள்...
சிவகங்கையும் சிதம்பரமும்... 27

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in