சிவகங்கையும் சிதம்பரமும்... 27

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
மேடையில் கார்த்தி சிதம்பரம்
மேடையில் கார்த்தி சிதம்பரம்

இன்றைக்குச் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு...

தேவகோட்டையில் தமிழ் இசைச் சங்க தொடக்க விழா. சிறப்பு விருந்தினர் அன்புத் தலைவர் ப.சிதம்பரம்.

"என்னைத் தெரிகிறதா... எளியோன் கோவிந்தன். மாந்தோப்பு தெருவினிலே பண்ணை மேலாளன். மக்கள் கூடும் அரங்கத்தைச் சொல்கிறேன்" என்று கறுப்பாய் ஒல்லியாய் இருந்த அந்த இளைஞர் வரவேற்புரை வாசித்த மிடுக்கைப் பார்த்துவிட்டு, “தம்பி யார்?” என்று தலை நிமிரக் கேட்டார் தலைவர் சிதம்பரம்.

தமிழிசைச் சங்க விழாவில் இடது ஓரம் கோவிந்தன்...
தமிழிசைச் சங்க விழாவில் இடது ஓரம் கோவிந்தன்...

“தம்பிக்குச் சொந்த ஊரு அரியக்குடி. தேவகோட்டையில தியேட்டர் மேனேஜரா இருக்கு. உள்ளூருக்குள்ள பொது அமைப்புகள்ல தம்பிக்கு ரொம்ப ஈடுபாடு. நம்ம தமிழிசைச் சங்கத்துலயும் பொறுப்புல இருக்கு” என்று தலைவரிடம் மேடையிலிருந்த நகரத்தார் பெருமக்கள் நயமாய்ச் சொன்னார்கள்.

அண்ணன் கோவிந்தன் கனிவுப் பேச்சுக்குச் சொந்தக்காரர். சிரித்த முகம். அனைவருடனும் அன்பாகப் பழகும் தன்மை உள்ளவர். படிக்கிற காலத்திலேயே கைச் செலவுகளுக்காக தேவகோட்டையில் சினிமா தியேட்டரில் பணியாற்றத் தொடங்கி, பின்னர் அருணா தியேட்டர் மேலாளராகி அதே தியேட்டருக்கு உரிமையாளராகவும் ஆன அயராத உழைப்பாளி.

கோவிந்தன்
கோவிந்தன்

அன்றைக்கு தமிழிசைச் சங்கத்தில் கோவிந்தனுக்கு ஏற்பட்ட அறிமுகம், அதன் பிறகு தலைவர் சிதம்பரத்துடன் இன்னும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புகளைத் தந்தது. அதுவே, இளைய நிலா கார்த்தியுடனும் நெருக்கமான நட்பைப் போற்ற வைத்தது. அண்ணன் கோவிந்தன், கப்பலூர் ஐயா கரியமாணிக்கம் அம்பலம் குடும்பத்துக்கும் நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய ஓட்டு வங்கியான, கப்பலூர் குடும்பத்துக்கும் தலைவர் சிதம்பரத்துக்கும் அவர் பாலமாக இருந்தார். இங்கே கோபமாகப் பேசினால் அங்கே சொல்வதில்லை. அங்கே கடிந்து கொண்டால் இங்கே சொல்வதில்லை. இரண்டு தரப்பையும் இப்படி அனுசரித்து, மன வருத்தம் இல்லாமல் கொண்டுசென்றது கோவிந்தனின் குணப்பக்குவம்.

அண்ணன் கோவிந்தன் உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையாகும் வரை, கப்பலூர் குடும்பத்துக்கும் கண்டனூர் குடும்பத்துக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் படுத்தார்; அங்கங்கே மனவருத்தங்கள் துளிர்விடத் தொடங்கின. காங்கிரஸின் நேரடி கள அரசியலில் கோவிந்தன் ஈடுபடவில்லை. ஆனால், இருந்த இடத்திலிருந்து வியூகங்களை செயல்படுத்தினார். அதனாலேயே அவர், தேவகோட்டையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பிறகு, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொறுப்புக்கு வந்தார். காரைக்குடி அருகே மானகிரியில் பண்ணை வீடு கட்ட வேண்டும் என்று இளைய நிலா தனது விருப்பத்தைச் சொன்னதிலிருந்தே, அந்தப் பகுதியில் சிறுகச் சிறுக நிலம் வாங்கிச் சேகரித்துப் பின்னர் தலைவர் குடும்பத்தின் வசம் கொடுத்தவர் கோவிந்தன்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

2019 மக்களவைத் தேர்தலில் சின்னச் சின்ன முட்டல் மோதல்களையும், பொருளாதார நெளிவு சுளிவுகளையும் கோவிந்தனே சமாளித்தார். அப்போது ஒட்டுமொத்த தொகுதியுமே கஜானா கதவு திறக்க, கோவிந்த தரிசனத்தை நம்பியிருந்தது. தேர்தல் நேரத்தில், எல்லா செய்திகளையும் அன்புத் தலைவரிடமோ இளைய நிலாவிடமோ உடனே கொண்டுபோக மாட்டார் கோவிந்தன். தன்னால் முடிந்த விஷயங்களைத் தானே முடித்துவிடுவார். கைமீறிப் போவதாகத் தெரிந்தால் மட்டுமே, விஷயத்தை அங்கே பாஸ் பண்ணுவார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, தலைவர் குடும்பத்துக்கும் கோவிந்தனுக்கும் கொஞ்சம் வருத்தம் என்று செய்திகள் கசிந்தன. அந்த வருத்தத்தில் கோவிந்தன் கோபித்துக்கொண்டு, மானகிரிப் பண்ணை வீட்டைவிட்டுச் சென்றதாகவும் கட்சிக்காரர்களே அப்போது காதுபட பேசினார்கள். உண்மை எதுவோ தெரியாது. ஆனால், இந்தச் செய்திகள் அடிபடத் தொடங்கிய பிறகு, கோவிந்தனை மானகிரி பக்கம் முன்னைப் போல் பார்க்கமுடியவில்லை என்றார்கள்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

தேவகோட்டை அருகே, சருகணி கிராமத்தில் இருக்கிறது திரு இருதயங்களின் ஆண்டவர் கோயில். இந்த ஆலயத்தின் கிழக்குப் பக்கத்தில் புனித லூயி மரி லெவே கல்லறை இருக்கிறது. இந்த ஆலயத்துக்கும் கல்லறைக்கும் சென்று வழிபட்டு வந்தால் கஷ்டங்கள் தீரும், நினைத்தது நடக்கும் என்பது நீண்ட கால நம்பிக்கை. பலருக்கு இது கைகூடியும் இருக்கிறது.

இளைய நிலாவுக்கு என்ன கஷ்டமோ, என்ன காரியம் கைகூட வேண்டி இருந்ததோ தெரியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்த தேவாலயத்துக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தார். தேர்தல் முடிந்த சமயத்தில் தேவகோட்டை வீட்டில் உடல் நலமில்லாமல் இருக்கிறார் கோவிந்தன். அந்த வழியாக சங்கடம்தீர சர்ச்சுக்குப் போனவர், ஒருமுறையாவது கோவிந்தன் வீட்டுக்கும் போய் அவரது சஞ்சலம் தீர்த்திருக்கலாம். கோவிந்தனும் இதை எதிர்பார்த்தார்; அது நடக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் அண்ணன் கே.ஆர். ராமசாமி, வாரம் இரண்டு முறை கோவிந்தன் வீட்டுக்குப் போய் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதலும் தேறுதலும் சொன்னார்.

கே.ஆர்.ராமசாமி
கே.ஆர்.ராமசாமி

இயற்கையின் முடிவை யார் நிறுத்திவைக்க முடியும்? இன்றிருப்பார் நாளை இல்லை. அப்படித்தான் ஒரு கட்டத்தில் நோயின் தீவிரம் அதிகமாகி, 2 மாதங்களுக்கு முன்பு கோவிந்தன் காலமாகிவிட்டார். தலைவர் சிதம்பரம் ட்விட்டரில் அவருக்கு இரங்கல் சொன்னார். சில நாட்கள் கழித்து, அப்பாவும் பிள்ளையும் அண்ணன் கோவிந்தன் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்துப் போனார்கள். உயிருடன் இருக்கும்போது இருவரும் இப்படி வந்திருந்தால், அந்தத் தெம்பில் அண்ணன் இன்னும் கொஞ்ச நாட்கள் ஜீவித்திருப்பாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது எனக்கு. ஏனென்றால், தலைவர் சிதம்பரம் மீது கோவிந்தன் கொண்டிருந்த விசுவாசம் அப்படி.

கோவிந்தனை வைத்து காங்கிரஸ் கட்சி நிறைய சாதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கு நாம் சாதித்துக் கொடுத்தது..?

(ஆயிரம்தான் சமத்துவம் பேசினாலும் அரசியலுக்கு வரும் பெண்கள் ஆயிரம் பிரச்சினைகளை எதிர்கொள்ளவே வேண்டி இருக்கிறது. சிவகங்கை காங்கிரஸிலும் அப்படியொரு பெண்மணிக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். அதற்காக அவர் அசந்துவிடவில்லை. “அத்தனை பேரையும் சந்திக்கு இழுக்காமல் விடமாட்டேன்” என்று சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி ஏற்கெனவே எங்களவர்கள் நன்கு அறிவார்கள் என்பதால், அவர் ஒட்டிய போஸ்டருக்குப் பக்கத்தில்கூட போக பயந்துபோய் நிற்கிறார்கள். அவரோ எதற்கும் துணிந்த வேலுநாச்சியாராகிவிட்டார். அந்தக் கதையை அடுத்துப் பேசுவோம்!)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

மேடையில் கார்த்தி சிதம்பரம்
சிவகங்கையும் சிதம்பரமும்... 26

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in