
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்று ரத்தத்தில் கையெழுத்திட்டு அழைப்பு கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவிற்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரத்தத்தால் கையெழுத்திட்டு வரவேற்கும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார் ஆர்.பி. உதயகுமார்.
முக்குலத்தோர் மக்களிடையே இருக்கும் அதிருப்தியின் காரணமாக கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தி நிகழ்வுக்கு பசும்பொன் செல்வதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். உடல்நிலை காரணமாக சொல்லப்பட்டாலும் தேவையற்ற பிரச்சினையை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை என்று அப்போது கூறப்பட்டது.
ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இருந்து நீக்கியதால் எடப்பாடி பழனிசாமி மீது தேவர் சமுதாய மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதே சமுதாயத்தை சேர்ந்த ஆர்.பி.உதயகுமார் மீதும் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 'எடப்பாடி பழனிசாமி வாழ்க' என கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் விரட்டி அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் வருகிற 30ம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் கலந்து கொள்ள வேண்டும் என்று பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவனர் முருகன்ஜி ஏற்கெனவே அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிலையில் பல்வேறு அமைப்பினர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சேலத்தில் சந்தித்து தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் புரட்சி பார்வர்ட் பிளாக் ஆண்டித்தேவர் பிரிவு தலைவர் முத்துராமன், முக்குலத்தோர் உறவின்முறை சங்கம் மறத்தமிழர் சேனை ஆதிமுத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை கண்ணன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு அகமுடையார் மக்கள் தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இன்று (27ம் தேதி) காளையார் கோவிலில் நடைபெறும் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக ரத்தத்தால் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்நாட்டு பாதுகாவலர். ஆயிரம் ஆயிரம் வளர்ச்சி திட்டங்களை, முன்னோடி திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, முதன்மையான திட்டங்களை தாய் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக வாரி வாரி வழங்கிய கருணையின் வடிவம் புரட்சித்தமிழர் எடப்பாடியார் புண்ணிய பூமியாம் பசும்பொன் மண்ணிற்கு நேரிலே வருகை தர உள்ளார்.
தெய்வ திருமகனாரின் திருக்கோவிலில் தமிழர் குலச்சாமி அம்மா தந்த 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஏழாம் படைவீடாம் பசும்பொன்னில் தெய்வ திருமகானாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி அருளாசி பெற்றிட எடப்பாடியார் பொற்பாதம் வணங்கி கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் இரத்த கையெழுத்து இட்டு வணங்கி வரவேற்கிறது. "இரத்தம் இரத்த உறவை அழைக்கிறது" என்றும் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!
அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை
நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!
இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!