ஒய்.எஸ்.ஷர்மிளா
ஒய்.எஸ்.ஷர்மிளா

அண்ணனை ஆட்சியிலிருந்து அகற்றுவேன்... தங்கையின் சூளுரையால் ஆந்திர அரசியலில் மேலும் அனல்

அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டியை ஆட்சியிலிருந்து அகற்றுவேன் என தங்கை ஷர்மிளா சூளுரைத்திருப்பது, ஆந்திராவின் மக்களவைத் தேர்தல் பிரச்சார களத்தில் மேலும் அனல் கிளப்பியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால், தனது சகோதரரான ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர்சிபி தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா இன்றைய பிரச்சாரக் கூட்டமொன்றில் அழைப்பு விடுத்திருக்கிறார். அண்ணன் - தங்கை நேரடி மோதலில் ஆந்திர அரசியலில் மேலும் அனல் பரத்துகிறது.

அண்ணன் ஜெகனுடன் தங்கை ஷர்மிளா -கோப்பு படம்
அண்ணன் ஜெகனுடன் தங்கை ஷர்மிளா -கோப்பு படம்

வரும் மக்களவைத் தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஷர்மிளா, அங்கு இன்றைய தினம் யாத்திரையுடன் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதனையொட்டிய பொதுக்கூட்டத்தில் பேசிய ஷர்மிளா, ’எதிர் வரும் தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் கட்சியை தோற்கடித்தால் மட்டுமே ஆந்திரா விரைவான வளர்ச்சியையும் அமைதியான சூழலையும் காணும்’ என்றார்.

“ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தில் கொலை அரசியலை ஊக்குவிக்கிறார். எனது உறவினர் விவேகானந்த ரெட்டி கொலையில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்” என்று பகிரங்கமாக ஷர்மிளா குற்றம் சாட்டினார். விவேகானந்த ரெட்டியின் கொலையாளிகள் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்கவே கடப்பா தொகுதியில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாக ஷர்மிளா கூறினார்.

”கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. தொழிற்சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. சரியான தலைநகரம் இல்லை. பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. ஒய்.எஸ்.ஆர் உயிருடன் இருந்திருந்தால், மாநிலம் முழுவதும் வளர்ச்சி அடைந்திருக்கும். மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் ஒய்.எஸ்.ஆரின் பொன்னான நாட்களை மீட்டெடுக்க முடியும்'' என்றும் ஷர்மிளா முழங்கியிருக்கிறார்.

தனது தந்தையான மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் முதல்வராக இருந்தபோது அமல்படுத்திய நலத்திட்டங்களை ஷர்மிளா நினைவு கூர்ந்தார். “அந்த திட்டங்கள் அனைத்தும் பின்னர் புதைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ​​ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொண்டு வருவேன் என ஜெகன் தம்பட்டம் அடித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார்” என்றும் ஷர்மிளா குற்றம்சாட்டினார்.

ஒய்.எஸ்.ஷர்மிளா
ஒய்.எஸ்.ஷர்மிளா

வழக்கமாக காங்கிரஸ் தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி தரும் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் தளபதிகள், ஷர்மிளாவின் சவடாலுக்கு வாயடைத்துப் போயுள்ளனர். முதல்வரின் சகோதரி என்பது மட்டுமன்றி, மறைந்த ஒய்.எஸ்.ஆர் மகளை தாக்குவது ஆந்திர மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் என்பதாலும் அமைதி காக்கிறார்கள்.

ஆந்திராவில் அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்கும் வரை உடன் உறுதியாக நின்ற ஷர்மிளா, அதன் பிறகு தனக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் இல்லை என்றதும், தெலங்கானாவை மையமாக்கி அப்போதைய முதல்வர் கேசிஆருக்கு எதிராக அரசியல் செய்தார். பின்னர் தனது புதுக்கட்சியை காங்கிரஸில் கரைத்தார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்திருப்பதால், அங்கே ஷர்மிளாவுக்கு வேலையில்லை என்று ஆந்திர மாநில கட்சி தலைமைப் பொறுப்பை டெல்லி காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஷர்மிளாவும் அதற்கேற்ப ஆளும்கட்சிக்கு எதிராகவும், அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராகவும் தீவிர அரசியல் மேற்கொண்டு வருகிறார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணன் - தங்கை அரசியல் மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in