கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவினாலும் தற்போதைய நிலையில் அதிமுக, மதிமுக இடையேதான் நேரடி மற்றும் கடும் போட்டி நிலவுகிறது.

அதிமுக வேட்பாளர் கருப்பையாஅறிமுக கூட்டம்
அதிமுக வேட்பாளர் கருப்பையாஅறிமுக கூட்டம்

திமுக கூட்டணியில் இந்த முறை திருச்சி தொகுதியை பெறுவதற்கு கடும் போட்டி இருந்தது. ஏற்கனவே அது காங்கிரஸ் வசம் இருந்ததால் இந்த முறையும் தங்களுக்கே வேண்டும் என காங்கிரஸ் கட்சி திருச்சி தொகுதியை கேட்டு போராடி வந்தது. தற்போதைய எம் பி.யான அக்கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லி தலைமையிடம் இதுகுறித்து தீவிர அழுத்தம் கொடுத்து வந்தார். அதனால் திமுகவிடம் அந்த கட்சியின் டெல்லி தலைமை  திருச்சி தொகுதியை கேட்டு வலியுறுத்தியது. 

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் கொடுக்கிறீர்கள், எங்களுக்கு ஒரே ஒரு தொகுதியைத் தானே கொடுக்கிறீர்கள்.  அதனால் அந்த ஒரு தொகுதியாக திருச்சியைக் கொடுங்கள் என்று மதிமுக கேட்டு வாங்கிவிட்டது. சரி திருச்சியை ஒதுக்குகிறோம், ஆனால் உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என்று திமுக கேட்டுக் கொண்டது. செத்தாலும் சாவோமே தவிர உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று உறுதி காட்டினார் துரைவைகோ.

ஸ்டாலினுடன் துரைவைகோ
ஸ்டாலினுடன் துரைவைகோ

சீட் கிடைக்காத வருத்தத்தில் காங்கிரஸ், உதயசூரியன் சின்னத்தை எதிர்த்துப் பேசியதால் திமுக என இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் வருத்தத்தில் உள்ள நிலையில் மதிமுகவின் துரை வைகோ வேட்பாளராக களத்தில் நிற்கிறார்.

இந்த இரண்டு கட்சிகளின் சார்பிலும் பெரிதாக ஒத்துழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் அமைச்சர் நேரு என்னை தனது மகனைப் போல பார்க்கிறார் என்று சொல்லி  திமுகவினரை சமாதானப்படுத்தி இருக்கிறார் துரை வைகோ. 

இருந்தாலும் கீழ்மட்ட தொண்டர்கள் இன்னும் முழு மனதோடு அவருக்கு வேலை செய்யவில்லை. காங்கிரஸ்காரர்கள் அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். இந்நிலையில் வைகோ ஒரு பேட்டியில் காங்கிரஸ் அந்த காலத்தில் செய்தது எல்லாமே தவறானது தான் என்று கூறவே அதுவும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி அதிருப்தி, கோபம் என திமுக கூட்டணி வேலைப்பார்த்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒரேமுகமாக இணைந்து அதிமுகவினர் பரபரவென்று வாக்குகளை அதிகரிக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் குமார் உட்பட உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரவர் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். 

அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்
அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்

வேட்பாளர் கருப்பையா மணல் குவாரி முறைகேடு தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட ராமச்சந்திரனுக்கு உறவினர். கரிகாலனின் சொந்த சகோதரர். அதனால் அவர்களைப் பொறுத்தவரை பணத்துக்கு பஞ்சமில்லை. அதனால்தான் அதிக வாக்குகளை வாங்கித்தரும் பகுதிகளைச் சேர்ந்த அதிமுகவினருக்கு கார் பரிசு,  தங்க நகை பரிசு என்று அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டாலும் உள்ளுக்குள் ஏராளமான பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. சுமார் 300 கோடி ரூபாய் வரையிலும் செலவு செய்ய அதிமுக தயாராக இருப்பதாக கட்சிக்காரர்கள் தெம்பாக கூறுகிறார்கள். பணம் தண்ணீராக செலவு செய்யப்படுவதால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இப்போதைக்கு அதிமுகவே முன்னிலை பெறுவதாக காட்சியளிக்கிறது.

அதே போல திருவெறும்பூர் உள்ளிட்ட திருச்சியின் புறநகர் பகுதிகளிலும் அதிமுகவுக்கே அமோக ஆதரவு இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். திருச்சி மாநகர் பகுதியில் திமுகவில் இருக்கும் தனது உறவினர்களை தேடிச்சென்று சந்திக்கும் கருப்பையா அவர்களிடம் பல விதமான சமரசங்களில் ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள். இதனால் தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவுக்கு கரம் அங்கு ஓங்கியிருப்பதாக தெரிகிறது.

மணப்பாறை பகுதிகளில் மதிமுகவுக்கு ஓரளவுக்கு ஆதரவு தெரிகிறது. மற்ற பகுதிகளில் சுணக்கம் தெரிந்தாலும் கடைசி நேரத்தில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் போன்றவர்கள் தங்களின் ஆதரவாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கி  குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்திலாவது துரை வைகோவை மேலே தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதாக திமுகவினர் கூறுகிறார்கள்.

இந்த இருவரின் போட்டியே பிரதானமாக இருப்பதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடம் தான் பெறுவார்கள் என்பதாக தற்போதைய கள நிலவரம் உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

இன்று மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை... சிக்காத சிறுத்தையால் தவிக்கும் வனத்துறை!

இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சதி... பாகிஸ்தானியர் உள்பட மூவர் கைது!

பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை... அதிர விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்!

அரசு மருத்துவமனை வாசலில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்... விரட்டியடித்த 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in