ராகுல் - பிரியங்கா விரைவில் அயோத்தி விஜயம்... உ.பி வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்னர் ராமர் தரிசனம் உறுதி

முந்தைய கோயில் தரிசனங்களில் ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
முந்தைய கோயில் தரிசனங்களில் ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களது உத்தரப்பிரதேச மக்களவைத் தொகுதிகளின் வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னதாக அயோத்தி சென்று ஸ்ரீராமரிடம் ஆசிர்வாதம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உ.பி-யின் ரேபரேலி, அமேதி ஆகியவை ’காந்தி’ குடும்பத்தினரின் ஆஸ்தான தொகுதிகளாகும். இந்திரா காந்தியின் கணவர் பெரோஷ் காந்தி முதல் அவர்களின் பெயரன் ராகுல் காந்தி வரை, தலைமுறைகள் தாண்டி அங்கே தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளனர்.

அமேதி தொகுதியில் 2004 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற ராகுல் காந்தி கடந்த 2019 தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். எனினும் ராகுல் போட்டியிட்ட இன்னொரு தொகுதியான கேரளத்தின் வயநாடு அவரை மக்களவைக்கு அனுப்பி வைத்தது. இம்முறை வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி, மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

அமேதியில் களம்கண்ட ஸ்மிருதி இரானி - ராகுல் காந்தி
அமேதியில் களம்கண்ட ஸ்மிருதி இரானி - ராகுல் காந்தி

தனக்கு வாக்களித்த மக்களை ராகுல் ஏமாற்றிவிட்டார் என ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜகவினர் அமேதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அமேதியிலும் ராகுல் காந்தியே போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வயநாடு தொகுதிக்கு 2ம் கட்டத் தேர்தலில் ஏப்.26 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நாளில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வெட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

எனவே வயநாடு தேர்தல் பணிகளை முடித்த கையோடு அமேதிக்கு ராகுல் காந்தி திரும்புவார் எனத் தெரிகிறது. அதே போன்று ரேபரேலி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற சோனியா காந்தி இம்முறை தனது வயோதிகத்தை முன்வைத்து ராஜ்யசபா வாயிலாக நாடாளுமன்றத்துக்கு திரும்பியிருக்கிறார். 2019 தேர்தலில் உ.பி-யில் காங்கிரஸ் வென்ற ஒரே தொகுதியான ரேபரேலியில், இம்முறை பிரியங்கா காந்தி போட்டியிட இருக்கிறார்.

இதன் பொருட்டு இந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாரம்பரிய காங்கிரஸ் தொகுதிகள் என்பதால், பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா உட்பட பலரும் அங்கே போட்டியிட வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தும், அதற்கு ஆம் - இல்லை சொல்லாது காங்கிரஸ் தலைமை கமுக்கம் காக்கிறது. தற்போது அமேதி - ரேபரேலி தொகுதிகளில் ராகுல் - பிரியங்கா உடன்பிறப்புகள் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமையின் அதிகாரபூர்வ அறிவிப்பும் மட்டுமே வெளியாக வேண்டும்.

இவற்றின் மத்தியில் உ.பி-யில் போட்டியிடத் தயராகும் இந்த உடன்பிறப்புகள், வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னதாக அயோத்தி ராமர் கோயிலுக்கு விஜயம் மேற்கொண்டு பால ராமரிடம் ஆசிர்வாதம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உ.பி என்பது தற்போதைக்கு பாஜகவின் கோட்டையாக விளங்குகிறது. அயோத்தி ராமர் கோயில் விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டும், அதனை காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்துள்ளனர். மேலும் அயோத்தி ராமர் கோயில் விழாவினை, அதில் பாஜக பங்கினை முன்வைத்து கடுமையாக விமர்சித்தும் உள்ளனர்.

காங்கிரஸ் வாரிசுகள்: சோனியா - ராகுல் - பிரியங்கா
காங்கிரஸ் வாரிசுகள்: சோனியா - ராகுல் - பிரியங்கா

எனவே அமேதி - ரேபரேலியில் களமிறங்கும், ராகுல் - பிரியங்காவுக்கு எதிராக அவர்களின் ராமர் கோயில் புறக்கணிப்பு விவகாரத்தை பெரும் தலைவலியாக மாற்ற பாஜக காத்திருக்கிறது. உ.பி மக்கள் மத்தியில் அயோத்தி ராமர் கோயில் மீதான அபிமானம் அதிகம் என்பதாலும், ராமர் கோயில் விஜயம் ராகுல் - பிரியங்காவுக்கு தவிர்க்க முடியாததாகிறது. அயோத்தி ராமர் கோயில் விழாவின்போதே, அதனை புறக்கணித்த இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பலரும், விரைவில் அயோத்தியில் சென்று வழிபடுவோம் என்று உறுதியளித்திருந்தனர்.

இந்த வகையிலும் ராகுல் - பிரியங்கா உடன்பிறப்புகள் தங்களது அயோத்தி விஜயத்தின் மூலமாக பாஜகவின் எதிர்ப்பாட்டை வாயடைக்கச் செய்ய காத்துள்ளனர். மே 3 அங்கே வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால், அதற்கு சற்று முன்னதாக ராகுல் - பிரியங்காவின் அயோத்தி விஜயம் அமையக்கூடும்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in