‘எனது எதிரி பிரியங்கா காந்தி’ -ஸ்மிருதி இரானி பிரகடனத்தின் பின்னணி!

ஸ்மிருதி இரானி - பிரியங்கா காந்தி
ஸ்மிருதி இரானி - பிரியங்கா காந்தி

அமேதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறங்கி இருக்கும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ”என்னுடைய எதிரி மற்றும் பிரதான போட்டியாளர் பிரியங்கா காந்தி” என்று அறிவித்திருக்கிறார்.

நடப்பு மக்களவை தேர்தலில் இந்தியாவின் நட்சத்திர தொகுதிகளில், உத்தரபிரதேசத்தின் அமேதியும் ஒன்று. இந்திரா காந்தியின் மகன்கள் சஞ்செய் காந்தி, ராஜிவ் காந்தியில் தொடங்கி, மருமகள் சோனியா காந்தி மற்றும் பேரன் ராகுல் காந்தி வரை ’காந்தி’ குடும்பத்தின் அலாதி தொகுதியாக அமேதி விளங்கி வந்தது. 2004, 2009, 2014 என தொடர்ந்து 3 முறை அமேதியில் வென்ற ராகுல் காந்தி, கடந்த 2019 தேர்தலில் வெற்றி வாய்ப்பை பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்தார்.

ஸ்மிருதி இரானி - ராகுல் காந்தி
ஸ்மிருதி இரானி - ராகுல் காந்தி

2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, இரண்டாவது முறைதான் வெற்றியை ருசிக்க முடிந்தது. அதிலும் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ராகுல் காந்தியை வென்றதில் அவர் பாஜகவின் கொண்டாட்டத்துக்கு ஆளானார். கடந்த முறை உத்தர பிரதேசத்தின் அமேதி, கேரளத்தின் வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இம்முறை தொடக்கத்தில் வயநாடு தொகுதியில் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் அமேதியில் இம்முறை போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியாகவே தொடர்ந்தது.

அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அமேதி போலவே ரேபரேலி தொகுதியும் காங்கிரஸ் தலைவர்களின் பாரம்பரிய வெற்றிக்கான தொகுதியாகும். ஆனால் இம்முறை வயோதிகத்தை காரணமாக்கி ரேபரேலியில் போட்டியிடுவதை தவிர்த்த சோனியா காந்தி, ராஜ்ய சபா எம்பியாக தேர்வானார். எவருடம் எதிர்பாரா திருப்பமாக ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அமேதி தொகுதிக்கு ராஜிவ் காந்தி காலம் முதல் தீவிர குடும்ப விசுவாசியாக இருந்த கே.எல்.சர்மா என்ற கிஷோரி லால் சர்மாவை நிறுத்தியுள்ளது.

இதனால் அமேதியின் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானார். அமேதியில் தனது வெற்றியை ஏற்கனவே முடிவு செய்திருந்த அவர், ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுவதை மீண்டும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் ராகுல் காந்தி தனது ஜாகையை ரேபரேலிக்கு மாற்றிக் கொண்டார். அடுத்த கட்டமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா காந்தியும் அமேதியில் தவிர்க்கப்பட்டிருக்கிறார். ராகுல் அல்லது பிரியங்காவை எதிர்பார்த்திருந்த அமேதி பாஜகவினர் கே.எல்.சர்மா நிறுத்தப்பட்டதற்கு, ‘காங்கிரஸ் கட்சி தனது பியூனை நிறுத்தி இருக்கிறது’ என்று கிண்டல் செய்தனர். இதனையொட்டியே ஸ்மிருதி இரானியும் புதிய பிரகடனத்தை அறிவித்திருக்கிறார்.

ஸ்மிருதி இரானி - கே.எல்.சர்மா
ஸ்மிருதி இரானி - கே.எல்.சர்மா

“நான் சிறார் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை” என கே.எல்.சர்மாவை தாக்கிய ஸ்மிருதி இரானி, என எதிரி மற்றும் பிரதான போட்டியாளர் பிரியங்கா காந்தி மட்டுமே. அவர் மேடைக்கு பின்னிருந்து அரசியலை இயக்குகிறார். அவருடன் போட்டியிடவே விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது வெற்றியின் மதிப்பை உயர்த்தவும் ஸ்மிருதி திட்டமிட்டுள்ளார். ’கே.எல்.சர்மாவை வெல்வது ஒரு விஷயமே இல்லை’ என்பது போலவும், தனது போட்டியாளராக காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியை வரிந்துகொள்வதன் மூலம், மீண்டும் தனது வெற்றியை பிரம்மாண்டமானதாக கட்டமைக்கவும் ஸ்மிருதி இரானி முயற்சிக்கிறார். நடப்பு மக்களவைத் தேர்தல் அரசியலின் சுவாரசிய களேபரங்களில் ஒன்றாக ஸ்மிருதி இரானியின் இந்த பிரகடனமும் சேர்ந்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in