பால் தட்டுப்பாடு என்பது அப்பட்டமான பொய்: அமைச்சர் மனோ தங்கராஜ்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

``தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இருப்பதாக வெளியான தகவல் அப்பட்டமான பொய்'' என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ”தமிழ்நாட்டில் பால்வளத்தை பெருக்குவதற்கும், பால் கொள்முதல் அதிகரிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுவது, கடன் வசதிகள் செய்வது, மானியங்கள் பெற்று தருவது போன்றவை குறித்து விரிவாக வாதிக்கப்பட்டது. இத்துறை சார்ந்த செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. குறுகிய காலத்திட்டமாக 2.50 லட்சம் கறவை மாடுகளுக்கு கடன் வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பாலின் தரத்திற்கு ஏற்ற விலை என்பதையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். கடந்த காலங்களில் பாலுக்கு ஒரு குறைந்தபட்ச விலை தான் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மாற்றி, தரத்திற்கு ஏற்ப விலை என்கிற நிலையை கொண்டு வந்துள்ளோம். 10 நாட்களுக்கு ஒரு முறை பாலுக்கான பணம் பட்டுவாடா செய்து வருகிறோம். ஆவினில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களுடைய திறன் மேம்பாட்டு பயிற்சி கோவை மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளோம்.

ஆவின் சப்ளையில் பற்றாக்குறை ஏற்படுவதாக வெளியான தகவல் அப்பட்டமான பொய். பாலின் சப்ளையினை குறைக்கவில்லை. கட்டுப்பாடு இன்றி எவ்வளவு கேட்டாலும் வழங்கி வருகிறோம். குறிப்பிட்ட தரத்தில் உள்ளது கிடைக்கவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு முழுவதுமாக பால் சப்ளை இல்லை எனக் கூறுவது அப்பட்டமான பொய். முன்பு பால் மட்டுமே தேவைப்பட்டு வந்த நிலையில் தற்போது பால் உற்பத்தி பொருட்களும் அதிக அளவில் விற்பனை நடைபெறுவதால் அதற்கு தகுந்த பால் தேவையும் உள்ளது. ஆவின் பால் விற்பனை எட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாரத்தை சேமித்துள்ளோம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டைவிட தற்போது 20% கூடுதல் ஆர்டர்கள் வந்துள்ளது. இன்னும் அது கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது” தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in