தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை- தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Updated on
3 min read

தென் தமிழக மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 16, 17ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. வரலாறு காணாத இந்த மழை காரணமாக 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

ஏராளமான பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு

இதனிடையே தென் தமிழக மழை பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ”தென் தமிழக மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை. மாநில பேரிடராக அறிவிக்கும் முயற்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை.

இனி அறிவிக்கவும் இயலாது. உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நிலச்சரிவுகள் மற்றும் கனமழை வெள்ளம் ஏற்பட்ட போதும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. தென் மாவட்ட மழை பாதிப்பின் போது தமிழக முதல்வர் டெல்லியில் இருந்தார். தமிழக முதல்வர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தமிழக மக்களுடன் நிற்காமல் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்தை முடித்த பின் போகிற போக்கில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தமிழக முதல்வர் டெல்லி வருவதற்கு முன்பே தேசிய பேரிடர் மீட்பு குழு தென் மாவட்டங்களுக்கு சென்றது. 2015 வெள்ளத்தின் மூலம் தமிழக அரசு என்ன பாடத்தை கற்றுக் கொண்டது. 2015ல் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழில்பேட்டை 2023 வெள்ளத்திலும் பாதிக்கப்பட்டது. வெள்ளப் பாதிப்பு விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை அமைச்சர்கள் உண்டாக்குகின்றனர். கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் தாமதமாகவே சென்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை செல்வதற்கு முன் தமிழக அதிகாரிகள் யாரும் மீட்பு பணியில் இல்லை. மழைக்கு முன் 92 சதவீத வடிகால் பணி முடிந்ததாக கூறினர். மழைக்கு பின் 45 சதவீத பணிகளை நிறைவு என மாற்றி பேசினர். சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட 4,000 கோடி ரூபாய் என்னவானது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை மையம் மீது குற்றம் சாட்டுவது ஏன்? இன்ச் பை இன்ச் இவ்வளவு மழை வரும் என சரியாக கணித்து கூற முடியாது. இத்தனை சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என எச்சரித்து இருந்தால் பணிகளை செய்து இருப்பார்களா?.

நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு
நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு

தென்மாவட்ட மழைக்கு முன்பாகவே டிசம்பர் 12ல் தமிழ்நாட்டுக்கான 2வது தவணை நிதி கொடுக்கப்பட்டது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய 2வது தவணைத் தொகை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு இந்தாண்டு வழங்க வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மழை குறித்து டிசம்பர் 12ம் தேதியே சென்னை வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தது.

12ம் தேதியிலிருந்து ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் எச்சரிக்கை வழங்கியது. சென்னை வானிலை மையம் மழை முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை எனக் கூறுவது தவறானது. தமிழ்நாட்டின் நலனுக்காக பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர். மழை பாதிப்புகள் குறித்த தகவல் தெரிந்தவுடன் உதவிகளை செய்ய பிரதமர், உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினர்” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in