அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார் என அறிய சில நாட்கள் காத்திருங்கள்... சஸ்பென்ஸ் வைத்த மல்லிகார்ஜுன் கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களாக அக்கட்சி யாரை களமிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் எழுந்துள்ளது.

மல்லிகார்ஜுன் கார்கே
மல்லிகார்ஜுன் கார்கே

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அசாம் மாநிலம், குவாஹாட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக கூறிவருகிறது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்கள் அக்கட்சியில் சேரும்போது அவர்களைப் பாதுகாத்து மாநிலங்களவை அல்லது சட்டப்பேரவைக்கு அக்கட்சி அனுப்பி வருகிறது" குற்றம் சாட்டினார்.

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ​​"நீங்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். மக்களிடம் இருந்து வேட்பாளர்களின் பெயர்கள் வந்து, நான் அறிவிப்பில் கையெழுத்திட்டால், அது அறிவிக்கப்படும்," என்று அவர் கூறினார்.

வயநாட்டில் இருந்து தேர்தலில் போட்டியிடும் ராகுல் காந்தியை பாஜக விமர்சித்தது குறித்து கேட்டதற்கு, “தொகுதிகளை மாற்றுவது குறித்து காங்கிரஸ் தலைவர்களை கேள்வி கேட்பவர்கள், வாஜ்பாய் மற்றும் அத்வானி எத்தனை முறை தங்கள் தொகுதிகளை மாற்றினார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்" என்றார்.

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி குடும்பம் போட்டியிட வேண்டும் என்று உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமைக்கு முன்மொழிவு அளிக்கப்பட்டுள்ளது.

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு முறையே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் அவரை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in