மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் சவான் காங்கிரஸிலிருந்து நேற்று முன்தினம் விலகினார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று அவர் அதிகாரபூர்வமாக மகாராஷ்டிர மாநில் துணை முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
இச்சம்பவம் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் காங்கிரஸை விட்டு வெளியேறுவது அந்தக் கட்சிக்கு பின்னடைவாக மாறும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிர மாநில மேலிட பொறுப்பாளருமான ரமேஷ் சென்னிதாலா தலைமையில் தற்போது அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். முக்கிய தலைவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வாய்ப்பு வழங்குவது குறித்தும் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!
பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!