கஞ்சா பொட்டலத்துடன் முதல்வரிடம் மனு அளிக்க வந்த பாஜக பிரமுகர்... மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்
மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்

மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் வந்த பாஜக பிரமுகரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா புழக்கத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணைக்காக அழைத்து செல்லப்படும் பாஜக பிரமுகர் சங்கர் பாண்டி
விசாரணைக்காக அழைத்து செல்லப்படும் பாஜக பிரமுகர் சங்கர் பாண்டி

இந்த நிலையில் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தந்தார். மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் பேரனுடன் விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த அவர், பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு புறப்பட்டு சென்றார். மதுரை விமான நிலையத்தில் அவரிடம் மனு அளிப்பதற்காக ஏராளமானோர் காத்துக் கொண்டிருந்தனர். முதலமைச்சரின் வருகையை ஒட்டி விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாஜக பிரமுகர் சங்கர் பாண்டி மற்றும் அவர் வைத்திருந்த மனு
பாஜக பிரமுகர் சங்கர் பாண்டி மற்றும் அவர் வைத்திருந்த மனுBG

அப்போது பாஜக மாநில ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி என்பவரும் முதலமைச்சரிடம் மனு அளிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். முதலமைச்சர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது அவரிடம் மனு அளிக்க சங்கர் பாண்டி முயற்சித்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது, அவர் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதால் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை கோரி, மனு அளிக்க வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த மனுவுடன் சிறிய அளவிலான கஞ்சா பொட்டலம் ஒன்றையும் அவர் இணைத்திருந்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரை அங்கிருந்து அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சங்கர் பாண்டியன் வைத்திருந்த மனுவில், ’கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்கள், ஏழைத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in