தேர்தல் தர்பார் I பங்காளி தேசத்தை ஆளப்போவது யார்? புதிய பாக். பிரதமர் எந்தளவில் இந்தியாவை பாதிப்பார்?

பிரதான போட்டியாளர்கள் இம்ரான் கான் - நவாஸ் ஷெரீப்
பிரதான போட்டியாளர்கள் இம்ரான் கான் - நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் தேசம் நாளை பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. களத்தில் இருக்கும் 3 பிரதான போட்டியாளர்களில் எவர் பாகிஸ்தான் பிரதமராவார், அவர் எந்த வகையில் இந்தியாவை பாதிப்பார் என்ற வகையில், இந்தியர்களுக்கும் பாகிஸ்தான் பொதுத்தேர்தல் கவனம் பெறுகிறது.

உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், நடப்பு 2024-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்தியா மட்டுமன்றி, உலகெங்கும் சுமார் 40-க்கும் மேலான நாடுகள் இந்த வருடத்தில் பொதுத்தேர்தலை சந்திக்கின்றன. அவற்றில் நமது பங்காளி தேசமான பாகிஸ்தானும் அடங்கும். பிப்ரவரி 8 அன்று, பாகிஸ்தானின் நாடாளுமன்ற கீழ்சபைக்கு, நான்கு மாகாண சபைகளுடன் சேர்த்து, 336 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

இதில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்ட 70 இடங்களும் அடங்கும். பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும், நாடாளுமன்றத்துக்குமாக சுமார் 18,000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த வகையில் 44 அரசியல் கட்சிகள் கோதாவில் இருந்தாலும், 3 கட்சிகள் மட்டுமே முக்கியமானவை.

4-வது வாய்ப்புக்கு காத்திருக்கும் நவாஸ்

பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆவதற்கான அதிகப்படி வாய்ப்பு ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ்’ கட்சியின் நவாஸ் ஷெரீப்புக்கு மற்றுமொரு முறை கனிந்திருக்கிறது. தற்போதைய காபந்து ஆட்சிக்கு முன்பாக பிரதமராக வீற்றிருந்த ஷெபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப்பின் இளவல் ஆவார். அவர் உட்பட ஒட்டுமொத்த பாகிஸ்தான் அரசியலையும், இங்கிலாந்தில் இருந்தபடி ரிமோட் கன்ட்ரோலில் ஆட்டிப்படைத்தார் அண்ணன் நவாஸ் ஷெரீப். தற்போதைய பொதுத்தேர்தலின் பொருட்டு கடந்தாண்டு அக்டோபரில் பாகிஸ்தான் திரும்பியவர், முழுமூச்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதான போட்டியாளர் இம்ரான்கான் சிறையில் இருப்பது நவாஸ் ஷெரீப்புக்கு அனுகூலம் சேர்ப்பது.

நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப்

இதற்கு முன்னதாக 3 முறைகள் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்திருக்கிறார். ஆனால் 3 முறையும் அவரது ஆட்சி அல்பாயுசில் கவிழ்க்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை இராணுவத்தால், அடுத்த முறை உச்ச நீதிமன்றத்தால், மூன்றாவது முறை ஜனாதிபதியால் என மும்முறையும் முழுதாக ஆட்சி செய்ய முடியாத குறை அவரை துரத்தி இருக்கிறது. தற்போதைய தேர்தல் பிரச்சாரத்திலும் செல்லும் இடமெல்லாம் அதைச் சொல்லியே அனுதாபம் தேடி வரும் நவாஸ் ஷெரீப், பிரதமரானால் ஒப்பீட்டளவில் இந்தியாவுக்கு சாதகமாக அமையக்கூடும்.

தனது தேர்தல் பிரச்சாரங்களின் ஊடே இந்தியாவை சுட்டிக்காட்டி வெறுப்பை விதைக்காது, நேர்மறையாகவே ஒப்பிட்டு வருகிறார் நவாஸ் ஷெரீப். மீண்டெழ முடியாதபடிக்கு பாகிஸ்தானின் மலையளவு கடனும், பொருளாதார சரிவும் அவற்றுக்கு காரணம் என்ற போதும், ஆக்கபூர்வமான வெற்றிக்கு நவாஸ் காத்திருக்கிறார். 2015-ல் நவாஸ் பாக் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் பிரதமராக மோடி, பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட வகையில் இருவருக்கும் இடையிலான புரிதல் எல்லையின் தொல்லைகளை தணிக்க உதவலாம்.

இம்ரான் இனி என்னாவார்?

கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்த இம்ரான் கானின் வசீகரம், அவர் பிரதமர் பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இம்ரானுக்காக உயிரைக் கொடுக்கும் அளவுக்கு வீரியமாக வேரூன்றி இருக்கிறது. இந்த வகையில் நவாஸ் ஷெரீப்பின் பிரதான போட்டியாளராக இம்ரான் கான் இருக்கிறார். ஆனால் இம்ரானை முடக்க அவர் மீது சுமத்தப்பட்ட நூற்றுக்கும் மேலான வழக்குகளில் ஒரு சிலவற்ற்றின் தீர்ப்புகள் அடுத்தடுத்து வெளியானதில், இன்னொரு பிறவி தேவைப்படும் அளவுக்கு சிறைவாச தண்டனைகளை வரிசையாக பெற்றிருக்கிறார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்பிய இம்ரானின் இரு வேட்புமனுக்களும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டதோடு, நீதிமன்ற தீர்ப்புகள் அவரை அரசியலில் ஈடுபடவும் ஆண்டுக்கணக்கில் தடை விதித்திருக்கின்றன. கட்சியின் சின்னம் பறிப்பு, முக்கிய நிர்வாகிகள் சிறையில் அடைப்பு என இம்ரான் கான் கட்சியினர் ஏகமாக முடக்கப்பட்டுள்ளனர். ஆனபோதும், அனைத்து தொகுதிகளிலும், சுயேச்சையாக நிற்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடிகளில் அவரது ’பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்’ கட்சியினர் மும்முரமாக உள்ளனர்.

அடிப்படைவாதிகளை அதிகம் ஆதரிக்கும் இம்ரான் கான் காலத்தில் இந்தியாவுடனான உறவில் உரசல்கள் அதிகம். இந்தியாவுக்கு எதிரான பயங்கவாதக் குழுவினர் மற்றும் உளவு அமைப்பினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இம்ரான் அக்கறை காட்டவில்லை. 71 வயதாகும் இம்ரான் கானுக்கு தன்னை தக்கவைத்துக்கொள்வதே தற்போது பெரும் போராட்டமாகி இருக்கிறது.

துடிக்கும் பூட்டோ வாரிசு

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவராக இருக்கும் பிலாவல் பூட்டோ சர்தாரி, 3 பிரதான போட்டியாளர்களில் இளையவர். அனுவத்திலும் குறைந்தவர். ஆனால் அதிரடியான நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரர். உலகின் முதல் முஸ்லீம் பெண் தலைவரான பெனாசிர் பூட்டோவின் மகன் மற்றும் நாட்டின் தூக்கிலிடப்பட்ட பிரதமரான சுல்பிகர் அலி பூட்டோவின் பேரன் என்ற கனத்த பின்னணிக்கு சொந்தமானவர். கடந்த இம்ரான் கான் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக துடுக்கான பேச்சுடன் வளைய வந்தவர்.

பிலாவல் பூட்டோ சர்தாரி
பிலாவல் பூட்டோ சர்தாரி

இந்தியப் பிரதமர் மோடியை ’கசாப்புக் கடைக்காரர்’ என வம்பிழுத்தவர். காஷ்மீர் பிரச்சினையில், இதர பாகிஸ்தான் தலைவர்களைவிட தீவிரமான பார்வை வைத்திருப்பவர். இந்த தேர்தலில் பிலாவல் நேரடியாக பிரதமராக வர வாய்ப்பில்லை என்ற போதும், பெரும்பான்மை அமையாத கட்சிக்கு உதவுவதன் மூலம், முக்கியமான கேபினட் அந்தஸ்தில் அமர்ந்து நாட்டை வழிநடத்த முன்வர வாய்ப்பாவார். நவாஸ் - இம்ரான் எவர் ஆட்சிய அமைத்தாலும், பிலாவல் உதவுவதன் மூலம் அடுத்த பிரதமராதற்கான அரசியல் அனுபவங்களை சேகரித்துக்கொள்வார்.

ஆட்சி கவிழ்ப்புக்கு அசிம் முனீர்

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் சயீத் அசிம் முனீர், பிரதமர் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர். பாகிஸ்தான் ராசிப்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை, எப்போது வேண்டுமானாலும் மறித்து முறித்து, அதிகாரத்தை சுவைக்க விரும்பும் ராணுவ ஜெனரல்களில் ஒருவராக அசிம் முனீர் வெளிப்படக்கூடும்.

சயீத் அசிம் முனீர்
சயீத் அசிம் முனீர்

ஜனநாயக முறைப்படி ஆட்சி நடத்தும் பாகிஸ்தானில் அவ்வப்போது மூக்கு நுழைக்கும் ராணுவத் தலைவர்களில் ஒருவராக அசிம் முனீர் அடையாளம் காணப்படுகிறார். நாட்டின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மட்டுமன்றி, பாதுகாப்பு தொடர்பான கடினமான முடிவுகளை எடுத்துவருவதிலும் அசிம் முனீர் அதிசயிக்க வைத்திருக்கிறார்.

நாட்டுக்குள் தீவிரவாத்தை வளர்க்கும், ஆப்கன் ஆதரவு பயங்கரவாதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது, ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு அதே வேகத்தில் பதிலடி தந்து உலக நாடுகளை வாயடைக்கச் செய்தது என அசிம் முனீரின் பிரதாபங்கள் ஏராளம். இந்தியாவைப் பொறுத்தளவில் பெரும் குடைச்சலாக மாறக்கூடியவர். தேர்தல் களத்தில் இல்லாத அசிம், அசாதாரண சூழல் நிலவும் பாகிஸ்தானில் எவர் ஆட்சி அமைத்தாலும், அதனைக் கவிழ்த்துப்போட்டு ராணுவ அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான அச்சுறுத்தலுடன் காத்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in