2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?

மோடி - பைடன் - புதின்
மோடி - பைடன் - புதின்

இந்தியா மட்டுமல்ல... உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் 2024-ம் ஆண்டில் பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றன.

இந்தியாவின் மோடி - ராகுல்
இந்தியாவின் மோடி - ராகுல்

முந்தும் இந்தியா

40-க்கும் மேற்பட்ட நாடுகள் தேர்தல் களம் காண்கின்றன என்ற போதும், அவையனைத்துமே ஜனநாயகம் காக்கப் புறப்பட்டவை அல்ல. சில நாடுகளின் தேர்தல்கள் மட்டுமே மக்களாட்சிக்கானது. இதர நாடுகளின் தேர்தல்கள் கண்துடைப்புக்கானது. அந்த வகையில் இந்தியாவில் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழா களைகட்ட இருக்கிறது.

இந்தியாவில் நடப்பு நிலவரப்படி பாஜக-வே மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்கள், மேற்கு வங்கம், ஒரு சில வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், பீகார் உள்ளிட்டவை தவிர்த்து பெரும்பான்மை இந்தியா பாஜக பக்கம் சாய்வதற்கே வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகத்தின் படி, பாஜக மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்ந்தால், தேர்தல் முறைமையை சீர்திருத்தத்தின் பெயரால் முற்றிலும் மாற்றியமைக்கக் கூடும். அது நடந்தாலும் 2024-ம் ஆண்டின் பொதுத்தேர்தல் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்காவின் டிரம்ப் - பைடன்
அமெரிக்காவின் டிரம்ப் - பைடன்

அமெரிக்கா மற்றும் பிரிட்டன்

இந்தியா போன்றே, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் தேர்தல்களும் எதிர்பார்ப்புக்குரியவை. அதிலும் உலகின் பெரியண்ணனாக பாவிக்கப்படும் அமெரிக்காவின் தேர்தல், சர்வதேசளவில் கவனம் பெறுபவை. ஜனநாயக கட்சியை பொறுத்தளவில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கிறார். குடியரசுக் கட்சி தரப்பில் டிரம்ப் நிற்பதை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோரும் கவனம் பெற்றுள்ளனர்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

திட்டவட்டமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றபோதும் 2024-ம் ஆண்டின் இறுதிக்குள் பிரிட்டனும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும். தற்போதைய பிரதமர் ரிஷி சுனக், அவரது கட்சியின் முந்தைய பிரதமர்களான போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் வரிசையில் சிரமதசையில் தவிக்கிறார். உக்ரைன், காசா என இருபெரும் போர்க்களங்கள், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளை அமெரிக்கா மற்றும் அதனை அடியொற்றும் பிரிட்டன் என இரு நாடுகளின் தேர்தல் முடிவுகளும் நேரடியாக பாதிக்கக்கூடியவை.

காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் இந்த இரு நாடுகளின் தேர்தல்களும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, குர்பந்த் சிங் பன்னுன் கொலைச்சதி தொடர்பான குற்றச்சாட்டில், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவில் சிறு உரசல் எழுந்தது. ஆட்சி மாற்றத்தை பொறுத்து அது தீவிரமாகவும் கூடும்.

ஸெலென்ஸ்கி - புதின்
ஸெலென்ஸ்கி - புதின்

ரஷ்யா மற்றும் உக்ரைன்

ரஷ்யாவில் பிரதான எதிர்க்கட்சிகளே களத்தில் இல்லாது மீண்டும் அதிபராக அரியணை ஏற்க இருக்கிறார் விளாதிமிர் புதின். சிறையில் இருக்கும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி உயிரோடு இருக்கிறாரா என அவரது வழக்கறிஞர் ஐயமுறும் அளவுக்கு முடக்கப்பட்டுள்ளார். உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவின் சர்வதேச வர்த்தகம் முடங்கியிருக்கிறது.

மூன்றாம் ஆண்டில் அடியெடுக்க இருக்கும் போரினை தொடர முடியுமா என்ற அளவுக்கு ஆயுத தளவாடங்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. சொந்த மக்களை அதிருப்திக்கு ஆளாக்கக்கூடிய வகையிலான இறுதியாட்டத்தை உக்ரைனில் நிகழ்த்தி போரை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார் புதின். அதற்காக தேர்தல் வரை பொறுமை காத்திருக்கிறார்.

2024, மார்ச் 31 அன்று உக்ரைன் தேசம் பொதுத்தேர்தலை சந்தித்தாக வேண்டும். ஆனால், அந்நாட்டுச் சட்டத்தின்படி போர் காரணமாக அதிபர் தேர்தல் ஒத்திப்போடப்படும். அப்படியே போர் முடிவுக்கு வந்தாலும், தேர்தலில் ஸெலென்ஸ்கி வெற்றி பெறுவது எளிது. ஆனால், உக்ரைனை வழி நடத்தும் அமெரிக்காவில், செனட்டர்களில் ஒரு பிரிவினர் உக்ரைனில் ஆட்சி மாற்றம் அவசியம் என்றும் அதற்காக அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். அமெரிக்க அதிருப்தியையும் மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் இந்தியாவுக்கு, ரஷ்யத் தேர்தலைவிட இதனால் உக்ரைன் போர் முக்கியத்தும் பெறுகிறது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் தேர்தல்கள்
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் தேர்தல்கள்

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்

எல்லைகளை பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் தேர்தல்களும் இந்தியாவுக்கு முக்கியமானவை. தேர்தலுக்காக பாகிஸ்தான் திரும்பியிருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியர்கள் கூச்சப்படும் வகையில் அண்மைக்காலமாக இந்தியாவை புகழ்ந்து வருகிறார். சீனாவின் பிடியிலிருக்கும் பாகிஸ்தானின் பிரதான அரசியல் தலைவரின் இந்தக் குரல் ஐயத்துக்கும் உரியது.

சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் முடக்கப்பட்டிருக்கிறார். பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா, அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து பரவலாக வேட்பாளர்களை நிறுத்தி வருவதை இந்தியா கவலையோடு கவனிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கொட்டம் தலைதூக்கி இருப்பதன் மத்தியில் 2024, பிப்ரவரி 8 அன்று நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் தேர்தலை இந்தியா ஊன்றிக் கவனிக்கிறது.

ஹசீனா - மோடி
ஹசீனா - மோடி

2024-ம் ஆண்டை தேர்தலுடன் வரவேற்கும் வகையில் ஜனவரி 7 அன்று பங்களாதேஷ் வாக்குப்பதிவு நடக்கிறது. தனது 5 மாநிலங்களுடன் பங்களாதேஷுடனான எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, பங்களாதேஷில் சீனாவின் கைஓங்குவதை கவலையுடன் கவனித்து வருகிறது.

தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியாவின் ஆசிர்வாதம் இருக்கிறது என்றால், ’பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி’ கட்சிக்கு அதிகரிக்கும் அமெரிக்காவின் ஆதரவு, ஹசீனாவை சீனாவின் வலையில் வலிய விழச் செய்கிறது. இதன் போக்கில் அமெரிக்கா - சீனா என வல்லரசுகளின் கைப்பாவையாக பங்களாதேஷ் அரசியல் களம் மாறுவதும், இன்னொரு மாலத்தீவாக ஆவதும் இந்தியா விரும்பாதது.

தொடரும் ஜனநாயகத் திருவிழா

இவற்றுக்கு அப்பால் தைவான், இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை எதிர்கொண்டிருக்கும் தேர்தல்கள், அரசியல், வணிகம் சார்ந்து இந்தியாவின் கவனத்துக்குரியவை. இன்னும் மெக்சிகோ, இரான் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் தேர்தல்களும், 2024-ம் ஆண்டினை அர்த்தமுள்ளதாக்க காத்திருக்கின்றன.

தேர்தல்
தேர்தல்

மாறும் புதிய அலையாக உலகமெங்கும் வலதுசாரி கட்சிகளும், தலைவர்களும் தலையெடுத்து வருவது, சில நாடுகள் பெயருக்கு மட்டுமே தேர்தலை நடத்துவது ஆகியவற்றின் மத்தியிலும் தேர்தல், ஜனநாயகம் உள்ளிட்டவை உலக மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட இந்த தேர்தல்கள் வழி செய்திருக்கின்றன. இவற்றின் ஊடாக முன்னுதாரணமாகவும், மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவாகவும் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது இந்தியராக நமது பெருமைக்குரியது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in