தமிழகத்தில் பாஜக ஆட்சி வருவதற்கு நீண்ட காலம் ஆகாது! சொல்கிறார் எல்.முருகன்

எல்.முருகன்
எல்.முருகன்

நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்று கூறிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி அருகில் உள்ள தமிழகத்திலும் பாஜக ஆட்சி வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகாது என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கூறியது: “ஆளுநர் அலுவலகத்தில் இருந்த 10 மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. அதைப் பரிசீலித்து ஆளுநர் நடவடிக்கை எடுப்பார். தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்புவது குறைகளை கேட்டு அனுப்புவதற்காக தான். அதற்கான உரிய பதிலை கொடுத்தால் ஆளுநர் பரிசீலிப்பார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தமிழகத்தில் விவசாயிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதைவிட்டுவிட்டு விவசாயிகளை ஒடுக்கும் விதமாக, அவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து, அதை திரும்ப பெறுவது, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையே பார்க்க முடிகிறது.

தமிழ் மண்ணான புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், எம்பி இங்கு இருக்கின்றனர். ஆகவே தமிழ் மண்ணில் பாஜக ஆட்சியானது நடந்து கொண்டிருப்பதைத்தான் காட்டுகிறது. புதுச்சேரி அருகில் உள்ள தமிழகத்திலும் பாஜக ஆட்சி வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகாது.

எல்.முருகன்
எல்.முருகன்

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவை கவுரவப்படுத்தும் வகையில்தான் பழங்குடியினருக்கான கவுரவ நிகழ்ச்சிகளை பிரதமர் நடத்தியுள்ளார். புதுச்சேரியில் விழாவுக்கு வந்த பெரும்பாலான பழங்குடியின மக்கள் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். இடமில்லாதவர்கள் தரையில் அமர்ந்திருந்ததை சர்ச்சையாக்கியது அவசியமற்றது. பழங்குடியின மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

இன்றைக்கு பல மாநிலங்களில் ரேஷன் உள்ளிட்ட பல திட்டங்களுக்கான பணம் நேரடியாக அவரவர் வங்கியில் செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஆண்டுக்கு 8 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. எனக்கு பிரதமர் ஆகும் ஆசை எதுவும் கிடையாது. பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அவர் ஹாட்ரிக் வெற்றி பெறுவார்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in