சாதிக் பாஷா போல ஜாபர் சாதிக்கின் உயிருக்கும் ஆபத்து உள்ளது... சிவி சண்முகம் கவலை!

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசும் சிவி சண்முகம்
விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசும் சிவி சண்முகம்

ஜாபர் சாதிக் உயிரோடு கிடைக்க வேண்டும். அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. ஜாபர் சாதிக்கிற்கு, சாதிக் பாஷா நிலைமை வந்துவிடக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. விழுப்புரம் நகராட்சித் திடலில் விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளரான சி.வி.சண்முகம் எம்பி பேசியதாவது, “இன்றைக்கு தமிழகம் பஞ்சாப் போன்று மாறிக் கொண்டிருக்கிறது. பஞ்சாப்பின் மிகப்பெரிய பிரச்சினை போதைப் பொருட்கள்தான். பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்கள் வருவதால் அந்த மாநிலம் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதைத் தடுப்பதற்கு அந்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

அமைச்சர் உதயநிதியுடன் ஜாபர் சாதிக்
அமைச்சர் உதயநிதியுடன் ஜாபர் சாதிக்

அமைதி மாநிலமாக, வளர்ச்சி பெற்ற மாநிலமாக உள்ள தமிழகத்தின் இன்றைய நிலைமை என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் எங்கு பார்த்தாலும் போதை வஸ்துக்கள், கஞ்சா, அபின் தங்குதடையின்றி கிடைத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது, அதை செய்கிறவர்கள் திமுகவைச் சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகிதான். மருத்துவமனைகளில் வழங்கப்பட வேண்டிய ஊசி, மருந்து, மாத்திரைகள் போதைக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதை சுகாதாரத்துறை அமைச்சர் வேடிக்கை பார்த்துக்கொண்டு ரோட்டில் டிரௌசர் மாட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கிறார்கள், கஞ்சா சாக்லேட் கிடைக்கிறது. இன்றைக்கு திமுகவைச் சேர்ந்த சென்னையில் மாவட்டப் பொறுப்பில் இருக்கிற ஜாபர் சாதிக் என்ற திமுக நிர்வாகி, 3,500 கிலோ போதை மருந்துகளை உணவுப் பொருட்களாக மாற்றி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடந்த 3 வருடங்களாக டில்லியிலிருந்து கடத்தி வருகிறார். இதை மத்திய அரசும், மாநில அரசும் கடந்த 3 வருடங்களாக கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்தபிறகு, அந்த நபர் கண்காணிக்கப்பட்டு, அவருடைய கூட்டாளிகள் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

போதை மருந்து கடத்தியதாக கூறப்படும் ஜாபர் சாதிக் திமுகவின் முக்கிய நிர்வாகி. இவருக்கு அமைச்சர் உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா உதயநிதி, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அதற்கான ஆதாரம் அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்திருக்கிறது.

போதைப் பொருள் கடத்தலிலிருந்து வந்த வருமானத்தில், உதயநிதி ஸ்டாலின் நடத்துகிற அறக்கட்டளைக்கு நிதியுதவி கொடுத்திருக்கிறார் ஜாபர் சாதிக். திமுக சென்னை மாவட்டச் செயலாளர் மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று என்.சி.பி. சோதனை செய்கிறது. இதுவரை ஜாபர் சாதிக் கண்டுபிடிக்கப்படவில்லை. ரூ2,000 கோடிக்கு போதைப் பொருள் கடத்தி இருக்கிறார். இது அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். ஜாபர் சாதிக்கிற்கு, சாதிக் பாஷா நிலைமை வந்துவிடக் கூடாது.

1.75 இலட்சம் கோடியை கொள்ளையடித்ததாக, ஊழலுக்கு எதிராக கைது செய்யப்பட்டு, திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட சாதிக் பாஷா மர்மமான முறையில் இறக்கிறார். அப்போது திமுகவின் கருணாநிதி ஆட்சி நடைபெறுகிறது. தற்கொலை என்று சொல்லி, இஸ்லாமிய சமுதாயத்தில் ஒருவர் இறந்தால் அவரை அடக்கம்தான் செய்ய வேண்டும். ஆனால் சாதிக் பாஷாவை அவசர அவசரமாக அவரது மனைவியின் ஒப்புதலைக் கூட பெறாமல், உடனடியாக எரியூட்டினார்கள். இன்றைக்கு சாதிக் பாஷா மனைவி காவல்துறையில் அது கொலை, விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

சிவி சண்முகம்
சிவி சண்முகம்

எனவே, ஜாபர் சாதிக் உயிரோடு கிடைக்க வேண்டும். அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. தமிழக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. எனவே, அவர் விரைவில் உயிரோடு கைது செய்யப்பட வேண்டும். போதைப் பொருள் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுக்கத் தவறிவிட்டது என்று நான் சொல்லமாட்டேன். ஏனென்றால், தவறு செய்தவரே திமுகவில் இருக்கிறார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் இது ஒரு மிகப்பெரிய குற்றம். ஒரு சமுதாயத்தை சீரழிக்கின்ற ஒரு குற்றம். இதைத்தான் நாங்கள் மூன்று வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்தோம்.

திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியாவது பேசினார்களா?. கூட்டணி தர்மத்திற்காக கஞ்சா விற்றாலும், போதைப் பொருட்கள் விற்றாலும் தவறு இல்லையா?. இவர்களுடைய இரட்டை வேஷத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். குற்றத்திற்கு துணை போகின்ற கூட்டணிக் கட்சிகளும் குற்றவாளிகள்தான். சீரழிந்துகொண்டிருக்கின்ற தமிழகத்தை காப்பற்ற வேண்டுமென்றால், போதையின் பிடியிலிருந்து தமிழகம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் இந்த நிர்வாகத் திறனற்ற செயல்படாத அரசு தூக்கியெறியப்பட வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!

கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை; வைரலாகும் வீடியோ!

இனி... 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!

சவுரவ் கங்குலியின் பயோபிக் படத்தில் நடிகர் ரஜினி... குஷியில் ரசிகர்கள்! எகிறும் எதிர்பார்ப்பு!

பாஜக வேட்பாளரின் ஆபாச வீடியோ... ரவுண்ட் கட்டும் எதிர்கட்சிகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in