அமேதியை மீட்க அச்சாரம் போடும் காங்கிரஸ்... கைகொடுக்குமா பிரியங்கா காந்தியின் மெகா திட்டம்?

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

காங்கிரஸின் பாரம்பரிய குடும்ப தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் அமேதியை பாஜகவிடமிருந்து மீட்பதற்கு பிரியங்கா காந்தி மெகா திட்டத்துடன் பிரச்சாரத்தை முன்னகர்த்தி வருகிறார்.

மக்களவைத் தேர்தல் சீசன் 3-ம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜகவின் பிரச்சார தாக்குதலை எதிர்கொள்ள காங்கிரஸ் நுட்பமான திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் அரசியல் பாரம்பரிய தொகுதிகளில் கடுமையான போர் நிகழ உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டில் உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, பிரியங்கா காந்தி, குடும்ப பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், அமேதியை பாஜகவிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்கும் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறார்.

ரேபரேலியில் பிரியங்கா, ராகுல், சோனியா காந்தி
ரேபரேலியில் பிரியங்கா, ராகுல், சோனியா காந்தி

காங்கிரஸ் குடும்ப பாரம்பரிய தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகள் வரும் மே 20-ம் தேதி நடைபெறும் 5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவை சந்திக்கின்றன.

கடந்த 2019-ம் ஆண்டில் அமேதி காங்கிரஸின் கை நழுவிப் போன பிறகு, அங்கு ஏற்பட்ட பின்னடைவுகளை சரிகட்டுவதற்காக பிரியங்கா காந்தி அணியினர் தீவிரமான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி உபியில் 3 நாள்கள் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோற்று, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

எனவே, இந்த முறை அமேதியில் சிறப்பு கவனம் செலுத்தவும், ரேபரேலியில் வயநாட்டை மிஞ்சும் வெற்றி வித்தியாசத்தை ராகுல் காந்திக்கு பெற்றுத் தருவதை குறிவைத்தும் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ரேபரேலியில் பூபேஷ் பாகேல், அமேதியில் அசோக் கெலாட் ஆகியோரின் ஆதரவுடன் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளார்.

பிரியங்கா காந்தி உள்ளூர் மக்களுடன் இணைந்து குடும்பத்தில் ஒருவராக பிணைப்பை ஏற்படுத்தவும், தொகுதி அளவிலான குழுக்களுடன் மாலை கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இதுதவிர, வாக்குச்சாவடி அளவில் கட்சித் தொண்டர்களை டிஜிட்டல் பிரச்சாரத்துக்கும் காங்கிரஸ் தயார் செய்துள்ளது. ரேபரேலியில் மட்டும் தொண்டர்களுடன் வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்க காங்கிரஸ் ஆயத்தமாகியுள்ளது.

ரேபரேலி தொகுதி
ரேபரேலி தொகுதி

அமேதியில் காங்கிரஸுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க, கடந்த 5 ஆண்டுகளில், ஸ்மிருதி இரானிக்கு எதிராக மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி மனநிலையை பயன்படுத்த தயாராகி வருகிறது காங்கிரஸ்.

கடந்த 1999-ல் அமேதியில் சோனியா காந்தி தேர்தல் அரசியலில் நுழைந்தது முதல், பிரியங்கா காந்தியும் நட்சத்திர பிரச்சாரகராக திகழ்ந்து வருகிறார். இந்த மக்களவைத் தேர்தலில் அவருக்கு தேர்தலில் டிக்கெட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முறையும் அவர் தன்னை பிரச்சார களத்துக்கே முழுமையாக அர்ப்பணித்து விட்டார்.

தேர்தல் பேரணிகளுக்கு தனது பாட்டி மற்றும் தந்தையுடன் சென்ற நினைவுகளை தனது பிரச்சாரங்களில் பகிர்ந்து வருகிறார் பிரியங்கா. பாஜக மீதான பிரியங்காவின் கூர்மையான விமர்சனங்களும் அதிக கவனம் பெற்று வருகிறது. கூடுதலாக ரேபரேலி, அமேதியின் ஒவ்வொரு மூலை முடுக்கு, மக்களின் மனோபாவம், கட்சியின் பலம், பலவீனம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர் பிரியங்கா காந்தி.

அமேதி தொகுதி
அமேதி தொகுதி

எனவே, மத்தியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும், தங்களது குடும்ப கோட்டைகளான அமேதி, ரேபரேலியில் முத்தாய்ப்பான வெற்றிகளைப் பெறுவதற்கும் பிரியங்கா காந்திக்கு இந்தத் தேர்தல் ஒரு அக்னிப் பரீட்சைதான். இதில் அவரது மெகா திட்டங்கள் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in