‘தேர்தல் ஆதாயத்திற்காக மதவாத உணர்வுகளைத் தூண்டி மக்களை பிளவுபடுத்துகிறார்’ -மோடிக்கு எதிராக காங்கிரஸ் அதிரடி

ராஜஸ்தான் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி
ராஜஸ்தான் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முன்வைத்து பிரதமர் மோடி சர்ச்சை கிளப்பியிருப்பதன் மத்தியில், ’தேர்தல் ஆதாயத்திற்காக மதவாத உணர்வுகளைத் தூண்டி இந்திய மக்களைப் பிளவுபடுத்த பிரதமர் முயற்சிப்பதாக’ காங்கிரஸ் கட்சி புகார் எழுப்பியுள்ளது.

ராஜஸ்தான் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசிய விவகாரம், நாடு முழுக்க பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தாக்கும் வகையில் அப்போது அவர் பேசியிருந்தார்.

”தாய்மார்கள் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கீடு செய்து அவற்றை பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், நாட்டின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியுள்ளது. அப்படியெனில் அந்த தங்கம் உள்ளிட்ட சொத்து யாருக்கு பகிர்ந்தளிக்கப்படும்?

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

அதிகம் குழந்தைகள் வைத்திருப்பவருக்கு அவை பகிர்ந்து அளிக்கப்படும். உங்கள் கடின உழைப்பில் சேகரித்த சொத்து, ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதனை நீங்கள் அனுமதிக்கலாமா? கடும் உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா?

நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வசமிருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்கானதல்ல. அது அவர்களின் சுயமரியாதை தொடர்பானது. பெண்கள் தாலியின் மதிப்பு தங்கத்திலோ அலது அதன் விலையிலோ இல்லை. அவர்கள் வாழ்க்கை மற்றும் இருப்பு சார்ந்தது. அதனை பறிக்கலாகுமா?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.

மோடியின் பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் எழுப்பியுள்ளது. ”ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி போலியான செய்திகளை பரப்புகிறார்? தேர்தல் ஆதாயத்திற்காக மதவாத உணர்வுகளைத் தூண்டி இந்திய மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். நடந்து முடிந்த முதல் கட்ட வாக்குப்பதிவு பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்பதால் கீழ்த்தரமான தந்திரங்களை கையாள்கிறார்” என காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் சீறியுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் சந்தித்து வழங்குவதற்காக பிரதமரிடம் நேரம் கோரியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தின் போக்கையும் கண்டித்துள்ளார். ”எல்லாவற்றிலும் பொய் சொல்ல தேர்தல் ஆணையம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளதா? அனைத்திலும் தலையிடும் தேர்தல் ஆணையம் இதில் மட்டும் மவுனம் காப்பது ஏன்?” என்றும் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

வாக்குப்பதிவு விவரங்களை செல்போனில் அறிந்து கொள்ளலாம்... புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்!

பகீர்... ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம்! உயிரை பணயம் வைத்து இன்ஸ்டா வீடியோ!

முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சர்ச்சை கருத்து... பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கபில் சிபல் வலியுறுத்தல்!

காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in