ஆம் ஆத்மி கட்சி உருவாக காரணமே காங்கிரஸும், பாஜகவும்தான் - அர்விந்த் கேஜ்ரிவால் அதிரடி!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் நாங்கள் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றன.

அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால்

இந்தக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதில் 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இண்டியா கூட்டணி’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்தக் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸுக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு அவை தீர்க்கப்பட்டு வருகின்றன. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.

இந்த நிலையில், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தேதியை, கடந்த மாதம் 9ம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அர்விந்த் கேஜ்ரிவால் பகவந்த் மான்
அர்விந்த் கேஜ்ரிவால் பகவந்த் மான்

அதன்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே ஆட்சியை கைப்பற்ற மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், "75 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளால் சாதிக்க முடியாததை ஆம் ஆத்மி கட்சி 5 ஆண்டுகளில் சாதித்துள்ளது. டெல்லி மக்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய 2 கட்சிகள் தான் இருந்தன. அந்த இரு கட்சிகளின் தலைவர்களுமே கஜானாவை நிரப்புவதை தவிர வேறு எதையும் செய்யவில்லை. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் நாங்கள் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in