வாக்குச்சாவடிகளில் கல்வீச்சு, தீவைப்பு, வெடிகுண்டு தாக்குதல்... மேற்கு வங்கம் கூச் பெஹாரில் உச்சக்கட்ட பதற்றம்

மேற்கு வங்கம் மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரிணமூல் தொண்டர்
மேற்கு வங்கம் மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரிணமூல் தொண்டர்

மக்களவைத் தேர்தலின் பதற்றமுள்ள வாக்குச்சாவடிகள் நிறைந்த மேற்கு வங்கத்தில், பாஜக - திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையிலான மோதலில், கல்வீச்சு, தீவைப்பு, நாட்டு வெடிகுண்டு பிரயேகம் உள்ளிட்ட களேபரங்கள் அரங்கேறி வருகின்றன.

மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில், 3 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என 3 தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்த தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.

பெஹார் நகருக்கு அருகிலுள்ள சந்த்மாரியில் இந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் கல்வீச்சும் நடந்தது. பெட்டகுரியில் நிகழ்ந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டரான அனந்த் பர்மன் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து மாநில அமைச்சர் உதயன் குஹா மருத்துவமனைக்கு சென்று பர்மனிடம் நலம் விசாரித்தார்.

வாக்காளர்களை மிரட்டுவது, வாக்குச் சாவடிகளுக்கு வரவிடாமல் தடுப்பது, பூத் ஏஜெண்டுகளைத் தாக்கியது உள்ளிட்ட புகார்களை திரிணமூல் காங்கிரஸ்- பாஜக கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டின. கூச் பெஹாரில் உள்ள டூஃபங்கஞ்ச் மற்றும் ஜல்பைகுரியில் உள்ள டப்கிராம் ஃபுல்பாரி போன்ற பகுதிகளில், கட்சிகளின் தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்பட்டன. பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதில் பதற்றம் கூடியது.

3 தொகுதிகளில் குச் பெஹார் தொகுதியில் அதிகளவிலான வன்முறை புகார்கள் எழுந்துள்ளதாக, மேற்கு வங்க ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதே கூச் பெஹாரில் நடைபெற்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, 5 பேர் கொல்லப்பட்டனர். மத்திய அமைச்சர் நிசித் பிரமானிக் மற்றும் மாநில அமைச்சர் உதயன் குஹா ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே மூண்ட நேரடி மோதலில் இந்த உயிர்ப்பலிகள் நிகழ்ந்தன.

தேர்தல் வன்முறைகளை எதிர்பார்த்த அரசியல் கட்சிகள் தொண்டர்களின் அபயக்குரலுக்கு செவிமெடுக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளன. கொல்கத்தாவில் இருந்தபடி வாக்குப்பதிவு களேபரங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தலைமையிலான குழு ஒன்று கண்காணித்து வருகிறது. பாஜக ஒருபடி மேலே சென்று வன்முறை உள்ளிட்ட தேர்தல் சார்ந்த புகார்களுக்கு என, தனது கொல்கத்தா அலுவலகத்தில் பிரத்யேக ஹெல்ப்லைன் ஒன்றை அமைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in