‘எந்த தந்தையும் எதிர்கொள்ள இயலாத துயரம்’... வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 8 நாட்களாக அவரது உடலைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அவரது உடமைகள் தனியாக கிடைத்த நிலையில் அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் மேலும் பதட்டம் கூடியது.

அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்
அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, சில கிலோ மீட்டர் தொலைவில் நேற்று மீட்கப்பட்டது. பாறையின் அடியில் சிக்கியிருந்த நிலையில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் சண்டிகரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 4 மணியளவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வெற்றி துரைசாமி உடலுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல் அமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மகன் வெற்றியுடன் சைதை துரைசாமி.
மகன் வெற்றியுடன் சைதை துரைசாமி.

வெற்றி துரைசாமி உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட “இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமிக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயபூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in