சீமானின் செல்வாக்கை சிதைக்கும் சூழ்ச்சியா? - 2; விஜயலட்சுமி காதலைச் சொன்ன தருணம்!

விஜயலட்சுமி, சீமான்
விஜயலட்சுமி, சீமான்
Updated on
3 min read

விஜயலட்சுமியின் புகார்கள் குறித்து விசாரிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்த சீமான், தன்னை எந்த வழக்கிற்காக விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ் என்று விளக்கம் கேட்டு வழக்கறிஞர் மூலமாக கடிதம் கொடுத்து அனுப்பினார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
சீமான் செய்தியாளர் சந்திப்பு

இது தொடர்பாக பொதுவெளியில் பேசிய சீமான், “ஒரு பெண் என்னை ஏமாத்திட்டு போய் இப்ப அது புருஷனோட வாழ்ந்துட்டு இருக்கும் நிலையில், என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு ஏமாத்திட்டு போயிருச்சுன்னு நான் சொல்லிக் கொண்டிருந்தால் காறித் துப்பி செருப்பைக் கழட்டி அடிப்பார்கள். அப்படித்தான் விஜயலட்சுமி சொல்கிறார். நீங்கள் எல்லோரும் அதை ரசிக்கிறீர்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு; ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. என்னை சுத்தி இத்தனை லட்சம் பிள்ளைங்க இருக்காங்க. எங்களுக்குன்னு ஒரு லட்சியக் கனவு இருக்கு” என்று ஆவேசம் காட்டினார்.

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி 2-வது முறையாக இன்றும் (செப்டம்பர் 14) போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், அதை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார் சீமான்.

தொடர்ந்து சீமான் - விஜயலட்சுமி விவகாரத்துக்குள் போகும் முன்பாக விஜயலட்சுமி யார்? அவர் எப்படி சீமானுக்கு அறிமுகமானார் என்பதைப் பார்ப்போம்.

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி

அடிப்படையில் பெங்களூர்வாசி விஜயலட்சுமி. இவரது தந்தை சண்முகசுந்தரத்துக்கு பூர்விகம் திருநெல்வேலி மாவட்டம். தாய் விஜயா இலங்கையைச் சேர்ந்தவர். விஜயலட்சுமிக்கு உஷா தேவி என்ற சகோதரியும் இருக்கிறார். அவரது கணவர் நடிகை ஜெயப்பிரதாவின் சகோதரர் ராஜ்பாபு.

பெங்களூருவில் படித்து வளர்ந்த விஜயலட்சுமி பள்ளியில் பயிலும் போதே நடனம் கற்றுக்கொண்டார். இதுவே அவருக்கு ‘நாகமண்டலா’ என்ற திரைப்படத்தில் பிரகாஷ்ராஜூடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இந்த படத்தின் வெற்றி விஜயலட்சுமிக்கு புதியதொரு புகழ்வெளிச்சத்தை தந்தது. அந்த சமயத்தில் சீமான் தனது முதல் படமான ’பாஞ்சாலங்குறிச்சி’யை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி

அந்த திரைப்படத்திற்கு நாயகியாக நடிக்க முதலில் சீமான் தன்னை நாடியதாக விஜயலட்சுமியே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தப்படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. அதேசமயம் இயக்குநரும், தமிழர் நலம் பேரியக்க தலைவருமான களஞ்சியம் 1998-ல் இயக்கிய ‘பூந்தோட்டம்’ திரைப்படம் மூலம் விஜயலட்சுமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் அவர் ஃபிரெண்ட்ஸ் படத்தில் விஜயின் தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் சீமான் இயக்கிய ‘இனியவளே’, ‘வீரநடை’ உள்ளிட்ட படங்கள் தோல்வியைத் தழுவின, இதனால், சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருக்க திட்டமிட்ட சீமான், திடீரென அரசியல் அரிதாரம் பூசிக்கொண்டு புறப்பட்டார். திராவிட அரசியலுக்கு மாற்றாக தமிழ் தேசியம் நோக்கி அவர் நகர தொடங்கினார்.

விஜயலட்சுமி, சீமான்
விஜயலட்சுமி, சீமான்

அந்தச் சூழலில் ஈழப்போர் உச்சத்தில் இருந்தது. ஈழத்தில் நடந்த கொடுமைகளை தமிழக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் நோக்கில் மேடை தோறும் முழங்கினார் சீமான். அப்போது, ஈழ விடுதலை என்னும் முழக்கத்துடன் சீமான் சேகு வேரா டீ சர்ட் அணிந்து வலம் வந்தது இளைஞர்களை அவர் பக்கம் நோக்கித் திருப்பியது.

இதற்கிடையில் தனது சமூக பொறுப்புணர்வை திரையில் வெளிப்படுத்த விரும்பிய சீமான், நடிகர் மாதவனை வைத்து ’தம்பி’ என்ற படத்தை எடுத்தார். இப்படம் சீமான், மாதவன் இருவரது திரை வாழ்விலும் ஒளி பாய்ச்சியது என்றே சொல்லலாம்.

சீமான் 2006 காலகட்டத்தில்
சீமான் 2006 காலகட்டத்தில்

‘தம்பி’ திரைப்படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து சீமானுக்கு விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியதாகச் சொல்கிறார்கள். ஈழத்தில் தமிழர்களின் நிலை குறித்து திரைப்படம் எடுக்க விரும்பிய பிரபாகரன் தரப்பு, பாரதிராஜா, ராஜ்கிரண் என பலரையும் அணுகியது. அவர்களில் ஒருவராக சீமானும் பயணித்தார். பிரபாகரனுடனான சந்திப்பின்போது முழுக்க முழுக்க தமிழீழ விடுதலை பற்றியே சீமான் பேசியதாகச் சொல்வார்கள்.

தம்பி பட போஸ்டர், சீமான்
தம்பி பட போஸ்டர், சீமான்

தமிழ் சினிமாவில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மீண்டும் சீமான் நடிகர் விஜயை வைத்து ‘பகலவன்’ என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டார். அதன் கதை விஜய்க்கும் பிடித்திருந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை அந்தப் படம் தொடங்குவதற்கு தாமதமானது. அந்த இடைவெளியில் சீமான் மீண்டும் மாதவனை வைத்து இயக்கிய படம் தான் ‘வாழ்த்துக்கள்’. சீமான் வாழ்க்கையில் விஜயலட்சுமி மீண்டும் நுழைந்த தருணமும் அதுதான். மாதவன், பாவனா நடித்த இந்தப் படத்தில், விஜயலட்சுமிக்கும் முக்கியமான ரோல் கொடுத்தார் சீமான்.

நடிகர் விஜய்யுடன் சீமான்
நடிகர் விஜய்யுடன் சீமான்

சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் ’வாழ்த்துக்கள்’ படப்பிடிப்பில் தொடங்கிய நட்பு வளமாக வளர்ந்தது. இந்த நிலையில், 2008-ல் விஜயலட்சுமியின் சகோதரி உஷாதேவிக்கும், அவரது கணவர் ராஜ்பாபுவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது.

வாழ்துக்கள் படத்தின் பாடல் பதிவின் போது
வாழ்துக்கள் படத்தின் பாடல் பதிவின் போது

விவகாரம் முற்றிப்போய் ராஜ்பாபு மீது தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் உஷா தேவி. ஆனால், அரசியல் பின்புலம் காரணமாக ராஜ்பாபு மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியது போலீஸ். அந்த சமயத்தில் விஜயலட்சுமியின் குடும்பம் சீமானிடம் உதவிகேட்டுப் போய் நின்றது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் சீமானிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார் விஜயலட்சுமி. அடுத்து என்ன நடந்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்!

(சர்ச்சை வளரும்... )

விஜயலட்சுமி, சீமான்
விஜயலட்சுமி விவகாரம்; சீமானின் செல்வாக்கை சிதைக்கும் சூழ்ச்சியா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in