விஜயலட்சுமி விவகாரம்; சீமானின் செல்வாக்கை சிதைக்கும் சூழ்ச்சியா?

விஜயலட்சுமி விவகாரம்; சீமானின் செல்வாக்கை சிதைக்கும் சூழ்ச்சியா?

தமிழக அரசியலில் இன்று தவிர்க்கமுடியாத நபராக வலம் வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஈழப்போர் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இன்று வரை தமிழ் தேசிய அரசியலை கையிலெடுத்து, திராவிட அரசியலுக்கான மாற்றாக தன்னை முன்வைத்து அதில் மக்களின் கவனத்தையும் ஓரளவு ஈர்த்து வருகிறார் சீமான்.

ஈழ அரசியலை முன்வைத்து, வெளிநாட்டுத் தமிழர்களிடம் பணம் வசூலிக்கிறார் என்ற குற்றச்சாட்டு துவங்கி பிரபாகரனுடன், தான் இருந்ததாக கூறிய தகவல்கள் வரை தொடர்ந்து சீமான் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியல் காரணங்களுக்காக பல முறை கைதாகியுள்ள சீமான், கடந்த 2010-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பல நேரங்களில் முன்னுக்கு பின் முரணாக பேசுபவராகவும், எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும் சீமான் இருந்தாலும் கூட அவரது அரசியல் வளர்ச்சியை அவை பாதிக்கவில்லை. இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவரது செல்வாக்கும், அவரது கட்சிக்கான வாக்கும் வளர்ந்தே வருகிறது. இருபெரும் திராவிட கட்சிகளுக்கான மாற்று குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இன்னமும் இருப்பதைச் சரியாய் புரிந்து கொண்டு, கூட்டணி அமைக்காமல் தனித்தே இதுநாள் வரை தேர்தல்களைச் சந்தித்து வந்திருக்கிறார் சீமான்.

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி

ஆனால், ஆக்ரோஷம் கொப்பளிக்கும் சீமானின் கனல் பேச்சைப் போலவே சுழன்றடிக்கும் சுனாமியாய் அத்தனை ஆவேசத்தையும் இறக்கி வைத்து சீமான் மீது குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்து வைக்கிறார் நடிகை விஜயலட்சுமி.

கடந்த 2011-ம் ஆண்டு தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அவரால், தான் பலமுறை கர்ப்பமாகி, வற்புறுத்தப்பட்டு கருக்கலைப்பு செய்ததாகவும் விஜயலட்சுமி புகார் கிளப்பினார். பின்னர், அவரே வலிய சென்று அந்த புகரை வாபஸ் பெற்றார். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை... மீண்டும் 2020-ல் தற்கொலை முயற்சி, போலீஸில் புகார் என புயலைக் கிளப்பினார் விஜயலட்சுமி. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதிகாத்து வந்த விஜயலட்சுமி, மீண்டும் கடந்த மாதம் சீமான் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் கொடுத்தார்.

ஆனால், இம்முறை சீமான் மீது அளித்துள்ள புகார் அவரது அரசியல் எதிர்காலத்தையும், மக்கள் முன் அவருக்கு இருக்கும் ஒரு போராட்டத் தலைவனின் இமேஜையும் தூள்தூளாக்கும் ஆக்ரோஷத்துடன் வெளிப்படுகிறது.

சீமானை இப்படி சிக்கவைத்த சம்பவத்திற்கு பின்னால் அரசியல் சதி அரங்கேறி இருப்பதாக சீமானுக்கு ஆதரவான குரல்களும் எதிரொலிக்கின்றன. “14 பேர் வைரமுத்துவுக்கு எதிராக கொடுத்த புகார்களின் நிலை என்னாச்சு?” என்று அதிமுகவினரும், “இது ஏதோ நியாயம் கேட்பது மாதிரியில்லை... சீமானின் பெயரைக் கெடுப்பதையே நோக்கமாக கொண்டிருப்பது போல் உள்ளது” என்று நடிகை கஸ்தூரியும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இத்தனைக்கும் நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற காலத்திலிருந்தே உடனிருந்து, காப்பாற்றி, உதவிகள் செய்து வந்தவர் நடிகை கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் விஸ்வரூபுமெடுத்த பின், சீமானின் பேச்சும், திமுக மீதான விமர்சனங்களின் தொனியும் மாறியிருப்பதாகவும் கருத்துகள் வெளியாகின்றன. இந்நிலையில், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக போலீஸார் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ஆஜராக சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், “எனக்கு விளக்கமளித்தால் நேரில் ஆஜராகவும், வழக்கிற்கு முழு ஒத்துழைப்பும் தர தயார்” என கடிதம் மூலம் கூறியிருக்கிறார் சீமான்.

சீமானை நெருக்கடிக்குள் தள்ள முயற்சிக்கும் நடிகை விஜயலட்சுமி விவகாரத்தின் பின்னணி என்ன? இது சீமானின் பொதுவாழ்க்கையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? வழக்கம் போலவே ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த அஸ்திரத்தைக் கையிலெடுத்து வரும் நடிகை விஜயலட்சுமி, இம்முறையும் தேர்தல் அரசியலுக்காக பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறாரா என்பதை எல்லாம் தொடர்ந்து பார்க்கலாம்!

(சர்ச்சை வளரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in