ஓபிஎஸ் பரவாயில்லை... வேலூரில் 7 சண்முகங்கள்... கரூரில் 3 ஜோதிமணிகள் போட்டி... தேர்தல் பரிதாபங்கள்!

கரூரில் போட்டியிடும் ஜோதிமணிகள்
கரூரில் போட்டியிடும் ஜோதிமணிகள்

ஓபிஎஸ் நிலைமை பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு வேலூரில் ஏ.சி. சண்முகத்திற்கு எதிராக 6 பேர் சண்முகம் என்ற பெயரில் களமிறங்குகின்றனர். அதே போன்று கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியுடன் மேலும் 2 ஜோதிமணிகள் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறும் போது அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்படுகிறது. அதில் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு போட்டியாக, அதே பெயர் கொண்ட வேறு சிலரை வேட்பாளர்களாக நிறுத்துவது வாடிக்கை. இது போன்ற சம்பவங்கள் உள்ளாட்சி தேர்தலின் போது மிக அதிக அளவில் நடைபெறும்.

கரூர் ரயில் நிலையம்
கரூர் ரயில் நிலையம்

அந்த வகையில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருடன் அதே தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். இதில் நான்கு பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே போட்டியிடுகின்றனர். இதனால் வாக்காளர்களிடையே எந்த சின்னத்தில் யார் போட்டியிடுகிறார்கள் என்கிற குழப்ப நிலை நீடித்து வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

இந்நிலையில் கரூரிலும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கரூரில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள ஜோதிமணி மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவர் கை சின்னத்தில் போட்டியிடும் நிலையில் கரூர் மக்களவைத் தொகுதியில் மேலும் இரண்டு ஜோதிமணிகள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இனாம் கரூர் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஜோதிமணி.ஆ.சு என்ற நபர் சுயேச்சையாக ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடுகிறார். மணப்பாறை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி ஜோதிமணி.செ என்பவர் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதில் இவரது பெயருடன் இனிஷியலும் சேர்த்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியைப் போலவே ஜோதிமணி.செ என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் தொகுதியில் தற்போது 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் கரூரில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

இதேபோல் 31 வேட்பாளர்கள் களமிறங்கும் வேலூரில், சண்முகம் என்ற பெயரில் 7 பேர் போட்டியிடுகின்றனர். புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் இந்த தொகுதியில் களமிறங்குகிறார். திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த், ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள மன்சூர் அலிகான் இங்கு நட்சத்திர வேட்பாளராக கருதப்படுகிறார். இந்நிலையில் ஏ.சி.சண்முகம், சண்முகசுந்தரம், ஜி. சண்முகம்,. கே சண்முகம், எம்.பி.சண்முகம், பி.சண்முகம், சண்முகவேலு உட்பட 7 பேர் இந்த தொகுதியில் ஒரே பெயரில் களமிறங்குகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in