தமிழகத்துக்கு 29 பைசாதான்; உ.பிக்கு 2 ரூபாய் 73 பைசா... ஏன் இந்த அநீதி? - நாடாளுமன்றத்தில் கொந்தளித்த திருச்சி சிவா!

தமிழகத்துக்கு 29 பைசாதான்; உ.பிக்கு 2 ரூபாய் 73 பைசா... ஏன் இந்த அநீதி? - நாடாளுமன்றத்தில் கொந்தளித்த திருச்சி சிவா!

தமிழ்நாடு மத்திய அரசுக்குத் தரும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. அதேநேரம் உத்தரப் பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசா வழங்கப்படுகிறது. எதற்காக தமிழ்நாட்டிற்கு இந்த அநீதி என்று திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்

பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இப்போது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது.

இந்த விவாதத்தில் பேசிய திருச்சி சிவா, " இந்த அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.. மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஏழைகளுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரானது. சிறு குறு தொழில் செய்வோருக்கு எதிரானது. கார்ப்பரேட்களுக்கு ஆதரவானது. விவசாயிகளுக்கும் தொழிலாளர்களும் எதிரானது. மாநிலங்களுக்கு எதிராகவே இருக்கிறது.

திருச்சி சிவா எம்.பி.
திருச்சி சிவா எம்.பி.

இந்த அரசு மத்தியில் ஆட்சியை அமைத்த பிறகு, மாநிலக் கட்சிகளையும், உள்ளூர் பிரச்சினைகளையும் அழிக்க அப்பட்டமான முயற்சி நடக்கிறது. மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மை உடன் தான் நடத்துகிறார்கள். நிதி பகிர்வை எடுத்துக் கொள்ளுங்கள். நிதி ஆணையத்தின் பரிந்துரையைக் காட்டிலும் குறைந்த அளவே நிதியைத் தருகிறார்கள். முதலில் 34% ஆக இருந்து பிறகு 31.3% ஆக குறைத்தார்கள். இப்போது அது மேலும் குறைந்து 25%ஆக இருக்கிறது. மாநிலங்களுக்குத் தரப்படும் நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.

நேரடி வரி வசூலில் தமிழகம் தான் இந்த நாட்டிற்கு அதிக பங்களிப்பைத் தருகிறது. நாங்கள் மத்திய அரசுக்குத் தரும் ஒரு ரூபாய் வரியில் தமிழ்நாட்டிற்கு 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. அதேநேரம் உத்தரப் பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசா வழங்கப்படுகிறது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு.. எதற்காகத் தமிழ்நாட்டிற்கு இந்த அநீதி.

அனைத்து மாநிலங்களும் ஒன்று எனச் சொல்கிறார்கள். பிறகு ஏன் இந்த ஏற்றத்தாழ்வு. ஒரு மாநிலத்தில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அம்மாநில மக்களுக்கு என்ன தேவை என்பது தெரியும். ஆனால் இப்போது ஆளுநர் மாளிகை தடையாக இருக்கிறது. சட்டசபையில் நிறைவேற்றப்படும் பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்படுவதில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகள் உள்ளே புகுந்து மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் தடுக்கிறார்கள்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. புயல் மற்றும் அதீத மழையால் சென்னை மற்றும் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நாங்கள் இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி கேட்டோம். ஆனால் வெறும் ரூ. 450 கோடியை மட்டுமே தந்தார்கள். பிறகு விரிவான ஆய்வுக்குப் பிறகு வெள்ளத்தால் ஏற்பட்ட தேசங்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை” என்று தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், " விவசாயத்துக்கு அடுத்தபடியாக 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய சிறு, குறு தொழில் துறையை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது. சிறு, குறு தொழில்துறையினரின் 16,000 கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய அரசு, பெரு நிறுவனங்களுக்கு 5.3 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. மக்கள் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த கேள்வி எழுப்பினாலும் அதற்கு மத்திய அரசிடமிருந்து பதில் வருவதில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் முந்தைய இந்தியாவை கொண்டு வரும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in