மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் - அடித்துச்சொல்லும் சரத் பவார்!

சரத் பவார்
சரத் பவார்
Updated on
2 min read

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராக இருக்குமாறு தனது கட்சித் தொண்டர்களிடம் கூறிய சரத் பவார், மாநிலத்தின் நாம் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புனேவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி அலுவலகத்தில், என்சிபி கட்சியின் 25வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் சரத் பவார் மற்றும் பாராமதி எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய சரத்பவார், "கடந்த 25 ஆண்டுகளில், நாம் நமது சித்தாந்தங்களை பரப்ப முயற்சித்தோம் என்பதை இன்று நான் கூற விரும்புகிறேன். இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலம் நமது கைகளில் இருக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

இப்போது நாடு மிகவும் வித்தியாசமான சூழ்நிலையில் செல்கிறது. தேர்தல் முடிவுகளின்படி மக்களின் தீர்ப்பு மோடிக்கு ஆதரவானது அல்ல. அவர்களின் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், பீகார் மற்றும் தெலுங்கு தேசம் ஆகியவற்றின் உதவி கிடைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களின் விருப்பத்துக்கு அரசை நடத்தினர். யார் என்ன சொன்னாலும் அவர்கள் அவர்கள் கேட்கவேயில்லை, அப்போது அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது, அதிகாரம் மையப்படுத்தப்படாது, மக்கள் இப்போது மிகவும் புத்திசாலியாகிவிட்டனர்” என்று பவார் கூறினார்.

கட்சியின் நிகழ்ச்சி
கட்சியின் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்ரியா சுலே, "சோனியா காந்தி மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் சரத் பவார் பேசி, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வலுவான போட்டியை வழங்கி ஆட்சியைப் பிடிப்போம்" என்று கூறினார்.

காங்கிரஸில் இருந்து பிரிந்து 1999ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் உருவாக்கினார். கடந்த ஜூலை மாதம் என்சிபியில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, அஜித் பவார் மற்றும் சில எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா-பாஜக அரசில் இணைந்ததை அடுத்து அக்கட்சி இரண்டாகப் பிரிந்தது.

இருப்பினும், என்சிபி (சரத்சந்திர பவார் பிரிவு) மக்களவைத் தேர்தலின் போது 'மகா விகாஸ் அகாதி' கூட்டணியில் நல்ல வெற்றியை பெற்றது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் இக்கூட்டணி 30 இடங்களை வென்றது. என்சிபி (எஸ்பி) 8 இடங்களையும், காங்கிரஸ் 13 இடங்களையும், சிவசேனா (யுபிடி) 9 இடங்களையும் கைப்பற்றியது.

அதே நேரத்தில் வெறும் 17 இடங்களை மட்டுமே கைப்பற்றிய 'மகாயுதி' கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது. இதில் பாஜக 9 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே பிரிவு) 7 இடங்களிலும், அஜித் பவாரின் என்சிபி 1 இடத்திலும் வெற்றி பெற்றது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in