விஜய் பஞ்ச் மூலம் ஏக வசனத்தில் மோடியை சாடிய காங்கிரஸ்... இணையத்தில் கரைகிறதா கண்ணியம்?

அரசியல் சாசனத்துக்கு மரியாதை செய்யும் மோடி
அரசியல் சாசனத்துக்கு மரியாதை செய்யும் மோடி

பிரதமராக மீண்டும் பதவியேற்க இருக்கும் மோடி, அரசியலமைப்பு சாசனத்துக்கு தலைவணங்கி மரியாதை செலுத்திய காட்சிகள் புகைப்படம் மற்றும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் இதனை முன்வைத்து கேரள காங்கிரஸார் ஏக வசனத்தில் மோடியை தாக்கி இருப்பது சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது.

மூன்றாம் முறையாக பாஜக-வே வெல்லும் என்பதை ஆளும் கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சிகளான காங்கிரஸின் கார்கே முதல் ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால் வரை பலரும் முன்கூட்டியே தங்கள் கணிப்புகளில் ஏற்றுக்கொண்டிருந்தனர். கடந்த இரு பொதுத்தேர்தல் வெற்றிகளை விட இம்முறை அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்வோம் என்ற மதர்ப்பில் சில பாஜக தலைவர்கள், அரசியல் சாசனத்தில் முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள மூன்றாம் வெற்றியின் பெரும்பான்மை பலம் உதவும் என்றும் முழங்கி வந்தனர். பாஜகவினரின் இந்த சூளுரை எதிர்க்கட்சியினரை அதிகம் சீண்டியது.

அரசியல் சாசன கையடக்கப் பதிப்புடன் ராகுல் காந்தி
அரசியல் சாசன கையடக்கப் பதிப்புடன் ராகுல் காந்தி

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைத்தால், அது அடியோடு அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்யும் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கினர். ஆர்எஸ்எஸ் அடிப்படை சித்தாந்தங்களுக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் அமையும் என்றும், அதனால் சிறுபான்மையினர் மற்றும் ஓபிசி, பட்டியலினம், பழங்குடி இனத்தோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. தாமதமாகவே சுதாரித்த பாஜக, அரசியல் சாசனத்தை மாற்றும் திட்டமில்லை என்று வாதிட்டுப் பார்த்தது.

பாஜக பயந்தது போன்றே எதிர்க்கட்சிகளின் அந்த பிரச்சாரம், பாஜக பெரும்பான்மை இழப்பதற்கான காரணங்களில் ஒன்றாக மாறியது. தற்போது தனிப்பெரும்பான்மை இன்றி தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அரசை பாஜக கட்டமைக்க முன்வந்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் பாஜக எதிர்பார்த்ததற்கு மாறாக, கணிசமான பலத்தோடு காங்கிரஸ் அமர்ந்துள்ளது. இவற்றால் பாஜக மீண்டும் வெற்றி பெற்றபோதும் அரசியலமைப்பு சாசனத்தை திருத்தும் திடம் இம்முறை பாஜகவுக்கு வாய்க்கப் போவதில்லை என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

கேரள காங்கிரஸ் பதிவு
கேரள காங்கிரஸ் பதிவு

இதனிடையே இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கூட்டத்துக்கு முன்னதாக, அரசியலமைப்பு சாசனத்துக்கு தலைவணங்கி மோடி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றில் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் கேரள காங்கிரஸ், ’அந்த பயம் இருக்கனும் டா’ என்று உடன் பதிவிட்டிருந்தது. விஜய் திரைப்பட பஞ்ச டயலாக்கை இவ்வாறு பதிந்ததோடு, அதன் ஆங்கில அர்த்தத்தையும் அடைப்புக்குறியில் சேர்த்துள்ளது. இதே புகைப்படத்திருக்கு தமிழக காங்கிரஸ் விஜய் பஞ்ச் வசனத்தில் மரியாதைக் குறைவை நீக்கியுள்ளது.

கேரள காங்கிரஸின் சர்ச்சைப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடவே சர்ச்சைகளையும் சேர்த்திருக்கிறது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த திமுக அனுதாபிகள் இந்த பதிவை அதிகம் பகிர்ந்து சிலாகித்து வருகின்றனர். வேறு சிலர் பிரதமராக பதவியேற்க இருக்கும் மோடியை ஏக வசனத்தில் பேசுவது முறையா என கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in