இந்த தேர்தலில் ஜெயித்தது மோடியாக இருக்கலாம்; ஆனால் ‘ஆட்ட நாயகன்’ ராகுல் காந்திதான்... சசிதரூர் சிலாகிப்பு

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவின் மோடி வென்றிருந்தாலும் ’மேன் ஆஃப் தி மேட்ச்’ ராகுல் காந்திதான் என காங்கிரஸ் எம்பி சசிதரூர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மூன்றாம் முறையாக தொடர்ந்து வென்றிருக்கும் பாஜக, மீண்டும் பிரதமராக மோடி தலைமையில் ஆட்சி அமைக்க இருக்கிறது. இம்முறை அசுர பலத்துடன் ஆட்சியைத் தொடர விரும்பிய பாஜகவுக்கு தலையில் குட்டி தனிப்பெரும்பான்மை இல்லாது வாக்காளர்கள் தங்கள் கடமையாற்றி உள்ளனர். இதனால் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக இம்முறை ஆட்சியமைக்கத் தயாராகி வருகிறது.

சசி தரூர்
சசி தரூர்

இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வென்றிருப்பினும், மேன் ஆஃப் தி மேட்ச் என்றால் அது ராகுல் காந்திக்கே சேரும் என்றும், ராகுல் காந்தி மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியை அலங்கரிக்க வேண்டும் என்றும்’ திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பாக வென்றிருக்கும் சசிதரூர் இன்றைய தினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்திருக்கிறார்.

”ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் கார்கேவும் நாடு முழுக்க பரவலாக பிரச்சாரம் செய்தனர். இருவரில் ராஜ்சபா உறுப்பினராக இருக்கும் கார்கே, அங்கே எதிர்க்கட்சியின் தலைவராகவும் உள்ளார். அந்த எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை மக்களவையில் ராகுல் காந்தி ஏற்றுக்கொள்வது பொருத்தமானதாக இருக்கும். இது தொடர்பாக எனது கருத்தை பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்து வருகிறேன்" என்று சசி தரூர் கூறினார்.

மோடி தலைமையில் அமையவிருக்கும் கூட்டணி ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த சசி தரூர், “மோடி - அமித் ஷா இருவருக்குமே இம்முறை ஆட்சி நடத்துவது பெரும் சவாலாக இருக்கும். இது அவர்களின் சோதனைக் காலமாகவும் இருக்கும். கூட்டணி கட்சிகளின் இழுப்புக்கு ஆளாக வேண்டியிருப்பது மற்றும் தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியாதது ஆகியவற்றால் இம்முறை உதவாக்கரை அரசாங்கமாகவும் விளங்கும்” என்றும் சாடியுள்ளார்.

சசி தரூர் - ராகுல் காந்தி
சசி தரூர் - ராகுல் காந்தி

மேலும், “அக்னிபாத் போன்ற திட்டங்களை பீகார் கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால் பாஜக இம்முறை தொடர முடியாது போகலாம். கடந்த 10 ஆண்டுகளாக தனது நாடாளுமன்ற செயல்பாடுகளை அறிவிப்பு பலகை போல நடத்தி வந்த பாஜகவுக்கு இம்முறை அதுவும் சாத்தியமில்லை” என்றும் சசிதரூர் உறுதி தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in