பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வரவில்லை எனில் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்... கர்நாடக அமைச்சர் காட்டம்

Published on

பிரஜ்வல் ரேவண்ணா உறுதியளித்தவாறு அவர் பெங்களூரு திரும்பவில்லை எனில், அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள, ஜேடிஎஸ் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்ப உள்ளார். இது தொடர்பாக முன்னதாக அவர் வீடியோ வெளியிட்டு உறுதியளித்து இருந்தார். அவரை கைது செய்யும் நோக்கில் விமான நிலையத்தில் சிறப்பு புலனாய்வு போலீஸ் குழுவினர் தயாராக உள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா

இந்நிலையில் அவர் பெங்களூரு திரும்பாது போனால் என்னாகும் என்ற கேள்வியும் கர்நாடகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாகவும் இதே போன்று பலமுறை பெங்களூரு விமானத்துக்கு முன்பதிவு செய்துவிட்டு அதனை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார். எனவே இம்முறையும் அவர் தனது பயணத்தை ரத்து செய்தால், அரசியல் குழப்பங்கள் மட்டுமன்றி அரசின் சட்ட நடவடிக்கையிலும் தேக்கம் எழக்கூடும்.

அப்படியான இக்கட்டு எழுந்தால் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா இன்று உறுதியாக தெரிவித்தார். அதன் வரிசையில் வேறுபல நெருக்கடிகள் மூலம் அவர் எப்படியாயினும் பெங்களூருக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, மே 31-ம் தேதி பெங்களூரு திரும்பி சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராவதாக உறுதியளித்திருந்தார். அவர் ஜெர்மனியின் முனிச்சிலிருந்து கிளம்பி வெள்ளிக்கிழமை பெங்களூரு வந்திறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது முன்பதிவு டிக்கெட்டும் அதையே உறுதி செய்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

"சட்டப்படி அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை கைது செய்ய எஸ்ஐடி தயாராக உள்ளது. அப்படி அவர் வராது போனால் சிபிஐ மற்றும் இன்டர்போல் மூலம் அவரை பெங்களூரு கொண்டு வர ஏற்பாடு செய்வோம். முன்னதாக அவரது பாஸ்போர்டினை ரத்து செய்யக் கோருவோம். அதை மாநில அரசு நேரடியாகச் செய்ய முடியாது என்பதால் மத்திய அரசு மற்றும் ஏஜென்சிகள் உதவியை நாடுவோம்” என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பரமேஸ்வரா விரிவாக தெரிவித்தார்.

இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஹாசன் நகரில் நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த அணிவகுப்பு மனித உரிமைகள் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சமூக ஊடக தளங்களில் புழக்கத்தில் உள்ள வீடியோக்களை நீக்குவதை அரசு உறுதி செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

மீண்டும் மீண்டும் வழக்கு... மதுரையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவில் விபரீதம்: பட்டாசு வெடித்ததில் 15 பேர் படுகாயம்

தங்கம் கடத்திய வழக்கில் சசிதரூர் உதவியாளர் கைது!

x
காமதேனு
kamadenu.hindutamil.in