தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வாகி இருக்கும் மோடி, தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி செல்கிறார்.
ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி செல்கிறார். ஜி7 வருடாந்திர உச்சிமாநாடு, இம்முறை இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் உள்ள போர்கோ எக்னாசியா என்ற ரிசார்ட்டில் நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரான பின்னர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதாலும் அவரது இத்தாலி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கு அப்பால் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான, இந்திய பிரதமர் மோடியின் நட்பும் பிரசித்தி பெற்றது என்பதாலும், சமூக ஊடகங்களின் வழியே மோடியின் இத்தாலி விஜயம் கவனம் ஈர்த்துள்ளது. மெலோனி - மோடி என்ற பெயர்களை இணைத்து ’மெலோடி’ என்ற பதம் வைரலான அளவுக்கு இருவரின் சந்திப்புகள் பிரசித்தி பெற்றவை.
இரு உலகத் தலைவர்களும் எடுத்துக்கொண்ட செல்ஃபிகள் மீம் கன்டென்ட் ஆவதுண்டு. அண்மையில் மோடி 3.0 வெற்றிக்கும் எக்ஸ் தளத்தில் மெலோனி வாழ்த்துகள் பகிர, மோடி அதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
மோடியின் இத்தாலி பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்ற போதும், பிரதமர் மோடி ஜூன் 13ஆம் தேதி இத்தாலிக்குப் புறப்பட்டு ஜூன் 14ஆம் தேதி மாலைக்குள் திரும்புவார் என்பது உறுதியாகி உள்ளது.
பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத் துறைச் செயலர் வினய், என்எஸ்ஏ அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் உடன் பயணிக்க உள்ளது. இத்தாலி ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் உடன் பங்கேற்க உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!
விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!
போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!
வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!