எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்காத மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் சொல்வதையேனும் கேட்கட்டும் - கபில் சிபல் கடும் சாடல்!

பிரதமர் மோடி - கபில் சிபல்
பிரதமர் மோடி - கபில் சிபல்

’எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்பது பிரதமர் மோடியின் டிஎன்ஏ-இல் இல்லாதது; மணிப்பூர் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் சொல்வதையேனும் மோடி கேட்கட்டும்’ என மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் சாதிக்கும் பிரதமர், அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்பதில்லை என்றும், அப்படி கேட்பது அவரது டிஎன்ஏ-விலேயே இல்லை என்றும் ராஜ்யசபா உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கவலை தெரிவித்திருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்தையேனும் பிரதமர் மோடி கேட்கட்டும் என்றும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய கபில் சிபல், பல்வேறு தேசிய விவகாரங்களை முன்வைத்து பாஜக மற்றும் பிரதமர் மோடியின் நிலைப்பாடுகளை கண்டித்தார். அப்போது, மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை புறந்தள்ளிய மோடி, மோகன் பகவத்தின் கருத்துக்கேனும் செவி சாய்க்க வேண்டும் என்றார்.

நேற்றைய தினம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கார்யகர்த்தாக்களுக்கான நிகழ்வில் பேசிய மோகன் பகவத், ‘நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடரும் சமூக மோதல்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்றும், மணிப்பூர் ஒரு வருடத்துக்கு பிறகும் அமைதியை தவிர்ப்பது குறித்தும்’ கவலை தெரிவித்தார். மேலும் மணிப்பூர் விவகாரத்துக்கு முன்னுரிமை தருமாறும் ஆட்சியாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இதனை சுட்டிக்காட்டியே பிரதமர் மோடியின் மணிப்பூர் நிலைப்பாடினை கபில் சிபல் தாக்கியுள்ளார். “வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அவருடைய நாடாளுமன்ற உரைகளை கேட்டிருக்கிறேன். எதிர்க்கட்சிகளை வாஜ்பாய் எப்போதும் எதிரியாக பாவித்ததில்லை. ஆனால் மோடி எதிர்க்கட்சிகளை விரோதியாக பாவிக்கிறார். மணிப்பூர் குறித்து நாங்கள் கூறியது எதையும் பிரதமர் கேட்கவில்லை. மோகன் பகவத் சொல்வதையேனும் அவர் கேட்கட்டும்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

முதல்வர் பைரேன் சிங்கை பதவி நீக்கம் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகிறோம். ஆனால் பாலியல் குற்றச்சாட்டில் ஒரு மல்யுத்த அமைப்பின் தலைவரை நீக்க முடியாதவர்கள் எவ்வாறு மாநில முதல்வரை நீக்குவார்கள்? மணிப்பூர் மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரிலும் பாஜக உறுதியளித்தது எதுவுமே நடக்கவில்லை. ரியாசியில் நடந்த கொடும் பயங்கரவாத தாக்குதல் அதனை நிரூபித்திருக்கிறது. மேலும் அங்கே விரைவில் தேர்தல் நடைபெறும் என்று உறுதியளித்தவர்கள் அவ்வாறு செய்யாதது ஏன்?” என்றும் அடுக்கடுக்காக கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

”பாஜகவுக்கு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே உள்ளது. ஆனால் ஆட்சியை ஒழுங்காக நடத்தும் எண்ணம் இல்லாததால் அடுக்கடுக்கான பிரச்சினைகள் எழுகின்றன. ஜவஹர்லால் நேருவையும் மோடியையும் ஒப்பிடுகிறார்கள். நேருவுடன் மோடியை ஒப்பிட மூன்று முறை ஆட்சியில் இருந்தால் மட்டும் போதாது. நேருவின் சீரிய சிந்தனையை மோடியிடம் எப்போதும் எதிர்பார்க்க முடியாது” என்றும் கபில் சிபல் தாக்கியுள்ளார்.

முன்னதாக கபில் சிபல் வெளியிட்ட ஒரு எக்ஸ் பதிவில், "மோடி அவர்களே, காஷ்மீரில் அதிகரித்து வரும் தீவிரவாதம், சமூக அமைதியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் என எதிலும் நீங்கள் எங்கள் பேச்சைக் கேட்க மாட்டீர்கள். அது உங்கள் டிஎன்ஏவில் இல்லை. குறைந்தபட்சம் மோகன் பகவத் சொல்வதையேனும் கேளுங்கள். அப்புறம் போய் விவேகானந்தர் பாறைக்குச் சென்று கேமரா இல்லாமல் தியானம் செய்யுங்கள்’ என தாக்கியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in