மின்வாரிய அலுவலகத்திற்குள் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்
மின்வாரிய அலுவலகத்திற்குள் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்

12 மணி நேரத்திற்கும் மேல் நீளும் மின் தடை... அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் கொந்தளித்த மக்கள்

புதுச்சேரியில் மின்தடை குறித்து புகார் அளிக்க வந்த பொதுமக்கள், அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் அருகே மன்னாடிபட்டு, செல்லிக்கட்டு, சோரப்பட்டு, வாதானூர், கலித்தரம்பட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. விவசாயம் பிரதானமாக இருக்கும் இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

12 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு
12 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு

மேலும் சமீப காலமாக இப்பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வருவதாகவும் அதனை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் தொடர் மின்வெட்டு தொடர்பாக புகார் அளிப்பதற்காக இன்று காலை திருக்கனூர் மின்துறை அலுவலகத்திற்கு இந்த கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். காலை 10:30 மணி வரையிலும் அதிகாரிகள் யாரும் மின்வாரிய அலுவலகத்திற்கு வராததால், அதிருப்தி அடைந்த பொது மக்கள் அலுவலகத்திற்கு உள்ளே சென்று அதிகாரிகளின் நாற்காலிகளில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்
போலீஸாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அதிகாரிகள் இல்லாமல் அலுவலகம் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், உரிய பதில் கிடைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் கூறி போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போன் மூலம் அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in