கணவரின் உடல் எரியூட்டப்பட்ட அதே நேரத்தில் மனைவி உயிரிழந்த சோகம்... நிர்கதியாய் நிற்கும் 3 குழந்தைகள்

உயிரிழந்த மல்லிகா-லட்சுமணன் தம்பதி
உயிரிழந்த மல்லிகா-லட்சுமணன் தம்பதி

தஞ்சை அருகே இடுகாட்டில் கணவரின் உடல் தகனம் செய்யப்பட்ட அதே நேரத்தில் வீட்டில் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தால், 3 குழந்தைகள் அனாதையாக தவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசல் சுண்ணாம்புக்காரத் தெருவில் வசித்து வந்தவர்கள் மெய்யழகன் (எ) லட்சுமணன்-மல்லிகா தம்பதியினர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். லட்சுமணன் கட்டட வேலை பார்த்து வந்துள்ளார். அவ்வப்போது சைக்கிள் ஸ்டாண்ட் ஒன்றில் பாதுகாவலராக பணி செய்து வந்துள்ளர். கோடை விடுமுறை என்பதால் மல்லிகா தனது 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.

மல்லிகா-லட்சுமணன் தம்பதி 3 குழந்தைகளுடன் வசித்து வந்த வீடு
மல்லிகா-லட்சுமணன் தம்பதி 3 குழந்தைகளுடன் வசித்து வந்த வீடு

நேற்று சைக்கிள் ஸ்டாண்ட் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த லட்சுமணன் வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். ஆனால் இன்று காலையில் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது லட்சுமணன் எவ்வித அசைவுமின்றி படுத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரை ஒரே நாளில் இழந்துவிட்டு தவிக்கும் குழந்தைகள்
பெற்றோரை ஒரே நாளில் இழந்துவிட்டு தவிக்கும் குழந்தைகள்

இதையடுத்து அவரது உடல் மீண்டும் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்து சிவகங்கையில் இருந்த மனைவி மல்லிகாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குழந்தைகளுடன் வீட்டிற்கு விரைந்து வந்த மல்லிகா, தனது கணவரின் உடலை பார்த்து அழாமல் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. லட்சுமணன் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, பின்னர் உறவினர்கள் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

இடுகாட்டில் லட்சுமணனின் உடல் எரியூட்டப்பட்ட பிறகு, உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மல்லிகா மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. ஒரே நாளில் தாய், தந்தையை இழந்து விட்டு மூன்று குழந்தைகள் செய்வதறியாது தவித்து நின்றது, உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in