மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

எச்.டி.குமாரசாமி
எச்.டி.குமாரசாமி

மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள என்டிஏ கூட்டணி அரசில், கர்நாடகாவின் ஜேடிஎஸ் கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி, வேளாண் துறை அமைச்சர் பதவியை எதிர்பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், மீண்டும் பிரதமராக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என ஒட்டுமொத்த நாடே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

இந்த முறை மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளதால், அதற்கு உறுதுணையாக உள்ள 16 எம்பி-க்களை கொண்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, 12 எம்பி-க்களை கொண்டுள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள், அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

இந்நிலையில் 7 எம்பி-க்களை கொண்டுள்ள மகராஷ்டிராவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி, மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை என அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி பீகாரில் 5 எம்பி-க்களைக் கொண்டுள்ளது. இக்கட்சிக்கும் புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் கர்நாடகாவில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி, வேளாண் துறை அமைச்சர் பதவியை கோரி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புது டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எச்.டி. குமாரசாமி பங்கேற்றார்.

அதன் பிறகு அவர் கூறுகையில், “ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக இருக்க முடிவு செய்தோம். அமைச்சரவைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படவில்லை. எனக்கு அப்படி எந்த கோரிக்கையும் இல்லை. இது அனைத்தும் வதந்திகள்.” எனத் தெரிவித்தார்.

ஆனால், நேற்று மதியம் டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்பு, குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். விவசாயப் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பும் ஜேடிஎஸ் கட்சிக்கு விவசாயத் துறை ஏற்றது. கர்நாடகாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக பாஜக தலைமை முடிவெடுக்கும்" என குமாரசாமி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in