அரசியலமைப்புச் சட்டத்திற்கு தலை வணங்கிய நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ!

அரசியல் அமைப்புச் சட்டத்தை வணங்கிய நரேந்திர மோடி
அரசியல் அமைப்புச் சட்டத்தை வணங்கிய நரேந்திர மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன் பிரதமர் நரேந்திர மோடி தலைவணங்கி வணக்கம் செலுத்தினார்.

இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

அதேநேரம், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் 16 தொகுதிகளையும், ஜனசேனா 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்களையும், சிராக் பஸ்வானின் லோக் ஜனதா தளம் 5 இடங்களையும் வென்று கூட்டணிக்கான பெரும்பான்மையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் ஒருமனதாக மோடியை தலைவராகத் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன், அரசியலமைப்பு சபையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன் தலைவணங்கி வணக்கம் செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் மற்றும் எச்.டி.குமாரசாமி ஆகியோருடன் பேசினார். பின்னர் பேசிய மோடி, “அரசாங்கத்தை நடத்த பெரும்பான்மை அவசியம், நாட்டை வழிநடத்த ஒருமித்த கருத்து அவசியம்” என்றார்.

தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி அரசியல் சட்டத்தை மாற்றப் போவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் சட்டத்தை மாற்ற 400 இடங்கள் தேவை என கர்நாடகா பாஜக எம்.பியாக இருந்த அனந்த் குமார் கூறியிருந்தார். இது பிரதமர் மோடி மற்றும் சங்க பரிவாரத்தின் மறைமுக நோக்கத்தை வெளிப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.

தற்போது அதே அரசியல் சாசனத்துக்கு நரேந்திர மோடி பணிந்து வணக்கம் செலுத்தியது தேர்தல் கொடுத்த பாடம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அரசியல் சாசனத்தை நரேந்திர மோடி வணங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in