வலிப்பு வந்ததுபோல நடித்து வாகன வழிப்பறி... மனமிரங்கியவரை ஏமாற்றிய திருடர்களை துரத்தியது சோகம்

வலிப்பு - மாதிரி படம்
வலிப்பு - மாதிரி படம்

உயிர்காக்க உதவும் மனம் கொண்டவரை தாக்கி அவரது உடமைகளை பறித்துச் சென்ற இரு திருடர்களுக்கு நேர்ந்த சோகம் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பேசுபொருளாகி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வசிக்கும் பொன்னார் என்ற இளைஞர் நேற்றிரவு காட்டுப்புத்தூர் நோக்கி தனது பைக்கில் விரைந்து கொண்டிருந்தார். கூலித்தொழிலாளியான இவர் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருபவர். ஆனபோதும் அவசர ஆபத்துக் காலங்களில் பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்.

அந்த உதவும் மனமே தனக்கு ஆபத்தை விளைவிக்கப்போகிறது என்பதை உணராது, காட்டுப்புத்தூரில் இருக்கும் தேங்காய் மண்டிக்காக விரைந்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் அருகே கணவாய்ப்பட்டி பகுதியை வேகமாக கடந்து செல்லும்போது சாலையில் பொன்னார் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது.

பொன்னார்
பொன்னார்

சாலையின் சற்று ஓரமாக ஒருவர் துடித்துக்கொண்டிருக்க, அருகிலிருந்த மற்றொருவர் உதவிக்காக பரிதவித்துக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக அப்பகுதியைக் கடந்த பொன்னாரை நோக்கியும் அந்த இளைஞர் அபயக் குரல் எழுப்பினார். முதலில் ஏதோ விபத்து நடந்திருப்பதாக நினைத்து வேகத்தை குறைத்தார் பொன்னார்.

அங்கே வலிப்பு வந்த ஒருவர் துடித்துக்கொண்டிருப்பதும் அருகிலிருந்தவர் அவருக்கான உதவிக்காக அழைத்ததும் பின்னர்தான் தெரிந்தது. பதறிப்போன பொன்னார் வண்டியை நிறுத்தி விட்டு ஓடோடிச் சென்றார். வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருந்தவருக்கு தனது பைக் சாவியை கையளித்தார்.

போதாதென்று பைக்கில் வைத்திருந்த இரும்பு பொருளையும் எடுத்து வந்து கொடுத்தார். மறுபடியும் ஓடிச்சென்று தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்தவர் வலிப்பு கண்டவர் முகத்தில் நீர் தெளித்து உதவ முயன்றார். பதற்றத்துடன் பொன்னார் இத்தனையும் செய்து கொண்டிருந்தபோது அங்கே எதிர்பாராதது நடந்தது.

வலிப்பு வந்து துடித்த நபர் இயல்பாக எழுந்தார். தன் உடன் இருந்த இன்னொரு நபருடன் சேர்ந்து பொன்னாரை, வலிப்புக்காக அவர் வழங்கிய இரும்பால் தாக்க ஆரம்பித்தார். நிலைகுலைந்து விழுந்த பொன்னாரிடமிருந்து அவரது செல்போன், ரொக்கப்பணம், பைக் சாவி ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

பொன்னாரிடம் வாகன வழிப்பறியில் ஈடுபட்ட இருவர்
பொன்னாரிடம் வாகன வழிப்பறியில் ஈடுபட்ட இருவர்

பின்னர் சாவகாசமாக பொன்னாரின் பைக்கில் ஏறி நாமக்கல் நோக்கிய சாலையில் விரைந்தனர். உயிருக்குப் போராடியவருக்கு மனமிரங்கி உதவ முன்வந்ததற்கு இந்த கதியா என சாலையோரம் படுகாயத்துடன் சுருண்டு கிடந்தார் பொன்னார். அவ்வழியே சென்ற வேறு சிலர் உதவியால் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னாருக்கு சற்று நேரத்தில் போலீஸார் மூலம் இன்னொரு தகவலும் கிடைத்தது. அதன்படி பொன்னாரின் பைக்கை பறித்துக்கொண்டு நாமக்கல் நோக்கி விரைந்த திருடர்கள் இருவரும், சற்று நேரத்திலேயே சாலையோர மரத்தில் மோதி படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாக, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். அவர்கள் இருவரும் நாமக்கல்லைச் சேர்ந்த நவீன் மற்றும் சென்னையைச் சேர்ந்த மாரி எனவும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைக்கேட்டு பொன்னார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இரு இளைஞர்களும் செய்தது தவறுதான் என்றாலும், அதற்காக உயிர்ப்பலியாக வேண்டுமா என்றும் பரிதாபம் தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in