பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரம் இது... தமிழிசை - அமித்ஷா விவகாரத்தில் கேரள காங்கிரஸ் ஆவேசம்!

தமிழிசையை கண்டித்த அமித் ஷா
தமிழிசையை கண்டித்த அமித் ஷா
Updated on
2 min read

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததற்கு கேரள காங்கிரஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித் ஷாவின் செயல்பாடு பிரதிபலிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு மாநில பாஜகவின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். பின்னர் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், சமீபத்தில் கட்சியின் செயல்பாடு குறித்து பேசிய தமிழிசை, "பாஜகவில் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் அதிகபேர், கட்சியில் இணைந்துள்ளனர். இது சற்று வருத்தம் அளிக்கிறது. நான் தலைவராக இருந்தால், இதற்கு அனுமதித்து இருக்க மாட்டேன்" என்று வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பாஜக கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது.

தமிழிசை செளந்தரராஜன் - அண்ணாமலை
தமிழிசை செளந்தரராஜன் - அண்ணாமலை

இதை கண்டித்து அண்ணாமலை ஆதரவாளர்கள், தமிழிசையை கண்டித்து சமூகவலைதளங்களில் கடுமையான வார்த்தைகளில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கெனவே தேர்தல் தோல்வியில் சோர்வடைந்த பாஜகவினர் மத்தியில், தமிழிசையின் இந்த கருத்து பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சமூகவலைதளங்களில் பல்வேறு விதமாக பாஜகவினர், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மறுபுறம், "தமிழிசை கூறியது சரிதான். இதைத்தான் பல ஆண்டுகளாக நாங்கள் சொன்னோம்" என்று திமுக, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி தலைமைக்கும் தகவல் சென்றுள்ளது. அதனால், அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்று முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பொறுபேற்றார். இந்த விழா மேடையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முகத்தை கடுமையாக வைத்தபடி தமிழிசையிடம் கடிந்து கொண்டார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை கண்டித்த அமித் ஷாவுக்கு சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை கேரள காங்கிரஸ் கண்டித்துள்ளது.

கேரள காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில், "பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித் ஷாவின் செயல்பாடு பிரதிபலிக்கிறது. சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தக்க பதிலடி கொடுத்துவிட்டு பாஜகவில் இருந்து தமிழிசை விலகி இருக்க வேண்டும். மருத்துவர் மற்றும் முன்னாள் ஆளுநரான தமிழிசை இதுபோன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ளக் கூடாது" என்று தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?

நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in