கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்... விசா முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவு

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சீன குடிமக்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும், நடப்பு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சிவகங்கையில் போட்டியிட்டு வென்றவருமான கார்த்தி சிதம்பரம், தேர்தலுக்கு அப்பாலான முக்கிய செய்தியில் இன்று இடம் பிடித்திருக்கிறார். சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளார்.

கார்த்தி - ப.சிதம்பரம்
கார்த்தி - ப.சிதம்பரம்

2011-ம் ஆண்டு மன்மோகன் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பு வகித்தார். அப்போது வேதாந்தா குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் மின் உற்பத்தி மையத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதில் சீன நிறுவனம் ஒன்று உடன் பங்களித்தது. இதற்காக சீன நிறுவனத்தின் 263 ஊழியர்கள், அவர்களது விசா காலம் முடிவடைந்த பின்னரும் பணி செய்ய வேண்டியிருந்தது.

அவர்களுக்கான விசா நீட்டிப்பை விதிமீறலாக மேற்கொள்ளும் வகையில் கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கமான பாஸ்கரராமன் என்பவருக்கு ரூ50 லட்சம் கைமாறியதாகவும், இதில் கார்த்தி மற்றும் அப்போதைய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு உண்டு என்றும் பின்னர் சிபிஐ குற்றம்சாட்டியது.

பின்னர் பணமோசடி தொடர்பான விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறையும் இதே வழக்கில் இணைந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக வழக்குப்பதிவு செய்து ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதோடு பாஸ்கரராமனை கைது செய்தனர். இதே வழக்கில் கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

கடந்த நவம்பர் முதல் இந்தாண்டு ஜனவரி வரை இந்த வழக்கின் அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை முறையிட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியது. அதற்கு இணங்கி கார்த்தி சிதம்பரம் ஆஜரானதை அடுத்து, ரூ1 லட்சம் தனிப்பட்ட பத்திரம் மற்றும் அதே தொகைக்கான உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in