மதக்கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்பாகும்... பாலிவுட் திரைப்படத்துக்கு கர்நாடகத்தில் அதிரடி தடை!

ஹமாரே பாரா திரைப்படம்
ஹமாரே பாரா திரைப்படம்

மதக்கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்பாகும் என்ற அடிப்படையில் இன்று வெளியாகவிருந்த ’ஹமாரே பாரா’ என்ற பாலிவுட் திரைப்படத்துக்கு, கர்நாடக அரசு இன்று அதிரடியாக தடை விதித்துள்ளது.

அன்னு கபூர், மனோஜ் ஜோஷி, பரிதோஷ் திரிபாதி மற்றும் பலர் நடித்துள்ள ’ஹமாரே பாரா’ என்ற பாலிவுட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே, அது தொடர்பான சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. வித்தியாசமான முயற்சி என்ற பெயரில் மக்கள்தொகை பெருக்கத்தின் பின்னணியை ஆராய்கிறோம் என இஸ்லாமியர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கதையை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்லாமியர்களை குறிவைத்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் சேர்ந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

இதனையடுத்து முன்னதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஒரு முஸ்லிம் உறுப்பினர் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்ததோடு, திரைப்படத்தை பார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் முடிவில் படத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், படத்தில் இடம்பெற்றிருந்த 2 சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கியதும் திரைப்படத்தை வெளியிடலாம் என அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் ஜூன் 14 வரை தள்ளிப்போடப்பட்டிருந்த இந்த திரைப்படம், முன்னதாக திட்டமிட்டபடி இன்றே திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னதாக 'ஹம் தோ ஹமாரே பராஹ்' என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் உத்தரவின்படி, 'ஹமாரே பராஹ்' என மறுபெயரிடப்பட்டது. இந்த திரைப்படம் இன்று வெளியாகவிருந்த சூழலில் கர்நாடக மாநிலத்தை மையமாகக் கொண்டு எதிர்ப்பு எழுந்தது. பல சிறுபான்மை அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு, கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964-ன் கீழ் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

மாநில அரசின் இந்த தடை குறைந்தது 2 வாரங்களுக்கோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையோ நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்த நடிகர் மனோஜ் ஜோஷி, ”இந்த திரைப்படம் எந்த மதத்தையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. எந்த ஒரு சமூகத்திலும் பெண்களை அவமரியாதை செய்யக்கூடாது என்பதுதான் இந்த திரைப்படத்தின் கருத்து. பெண்களுக்கான கல்வி, வளர்ப்பு, வேலைவாய்ப்பு, மரியாதை, அதிகாரமளித்தல் மற்றும் மக்கள் தொகை உள்ளிட்டவற்றை பேசும் இந்த திரைப்படத்தை அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in