ஹேமந்த் சோரன் மனைவி எம்எல்ஏ ஆனார்... ஜார்க்கண்ட் முதல்வராக விரைவில் நியமனம்?

கல்பனா சோரன்
கல்பனா சோரன்

சிறைவாசம் கண்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இன்று பதவியேற்றார்.

நிலமோசடியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஹேமந்த் சோரன். இதனால் தான் வகித்து வந்த ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அந்த இடத்தில் அவரது மனைவி கல்பனா சோரன் பொறுப்பேற்க திட்டமிடப்பட்டது. அதற்காக கட்சி எம்எல்ஏ சர்பராஸ் அகமது என்பவர், ஹேமந்த் சோரன் ஏற்பாட்டில் வலிய ராஜினாமா செய்தார்.

எம் எல் ஏ பதவியேற்ற கல்பனா சோரன்
எம் எல் ஏ பதவியேற்ற கல்பனா சோரன்

ஆனால் கல்பனா சோரனின் தலைமையை ஏற்பதற்கு ஜேஎம்எம் கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் மத்தியில் கணிசமான எதிர்ப்பு நிலவியதில், ஹேமந்த் சோரனின் தந்தை சிபு சோரன் காலத்து சீனியரான சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனபோதும் இந்தியா கூட்டணி சார்பிலான கூட்டங்களிலும், பாஜகவுக்கு எதிரான போராட்டங்களிலும் ஜேஎம்எம் கட்சியின் சார்பில் கல்பனா சோரன் பங்கேற்றார்.

இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற காண்டே தொகுதியில் இருந்து ஜார்க்கண்ட் சட்டமன்ற உறுப்பினராக வென்றுள்ள கல்பனா சோரன் இன்று பதவியேற்றார். சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார், முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் பிற ஜேஎம்எம் தலைவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பதவியேற்பை முன்னிட்டு தான் போட்டியிட்டு வென்ற காண்டே தொகுதியின் மக்களுக்கு கல்பனா சோரன் நன்றி தெரிவித்தார். "மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. எனினும் இந்த தேர்தலில் வென்றதன் மூலம் ஹேமந்த் சோரன் இடத்திலிருந்து ஜார்க்கண்ட் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளில், ஹேமந்த் சோரன் மீதான ஜார்க்கண்ட் மக்களின் அன்பு வெளிப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் கடந்த 3 மக்களவை தேர்தல்களை விட தற்போது பாஜகவின் ஆதிக்கம் குறைந்துள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார்.

ஹேமந்த் சோரன் - கல்பனா சோரன்
ஹேமந்த் சோரன் - கல்பனா சோரன்

இந்த இடைத்தேர்தலில் கல்பனா சோரன், பாஜகவின் திலீப் குமார் வர்மாவை 27,149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். ஜேஎம்எம் எம்எல்ஏ சர்பராஸ் அகமது ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியான இடத்தில் கல்பனா சோரன் போட்டியிட்டு வென்றுள்ளார். ஹேமந்த் சோரன் சிறைவாசத்தை முன்னிட்டு, முதல்வர் நாற்காலியில் கல்பனா சோரனை அமரவைக்கும் நோக்கில் சர்பராஸ் அகமது ராஜினாமா செய்தார். ஆனால் பிற்பாடு கல்பனா தலைமையை ஏற்பதில் கட்சியில் நீடித்த தயக்கம் காரணமாக அத்திட்டம் ஒத்திப்போடப்பட்டது.

எனினும் காலியான தொகுதியில் இடைத்தேர்தல் மூலம் தனது வெற்றியை உறுதி செய்த கல்பனா, சட்டப்பேரவை உறுப்பினராக ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார். இதனால் ஹேமந்த் சோரனின் பழைய திட்டப்படி கல்பனா சோரன் ஜார்க்கண்டின் முதல்வராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் அடுத்த சில மாதங்களில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தனது தலைமையிலான ஆட்சியை கல்பனா நிறுவவே வாய்ப்புள்ளது. இதன் மூலம் கட்சியின் சீனியரான சம்பாய் சோரனை முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்யும் தர்மசங்கடத்தையும் ஜேஎம்எம் கட்சி தவிர்க்கும்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in