ஆட்சி மாற்றத்தால் அலறும் ஆந்திரா - தெலுங்கு தேசம் கட்சியினரால் ஒய்எஸ்ஆர் கட்சியினர் உயிருக்கு ஆபத்து என ஆளுநரிடம் புகார்

ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு
ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தின் ஆட்சி மாற்றம் காரணமாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினரால், ஒய்எஸ்ஆர் கட்சியினருக்கு கடும் அச்சுறுத்தல் எழுந்திருப்பதாக புகார்கள் நீண்டுள்ளன.

ஆந்திர முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி தனது அரசியல் சதுரங்கத்தில் அவசரப்பட்டு எடுத்த ஒரு முடிவு, இன்று அவரது கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் அவர்களது உடமைகளுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஊழல் புகார் வழக்கொன்றின் உச்சமாக கடந்தாண்டு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இது அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது 73 வயது, என்டிஆர் மருமகன், கிங் மேக்கர் ஆகிய பின்னணிகள் அனுதாபத்தை ஏற்படுத்தின.

இதனால் தங்களுக்கான தருணத்துக்காக காத்திருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் நடப்புத் தேர்தலில் வெகுண்டெழுந்து வேலை பார்த்தனர். நாடெங்கும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு ஆந்திராவுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்தே நடந்தது. வெகுமக்களின் அனுதாப வாக்குகளும் சந்திரபாபு நாயுடு பக்கம் சரிந்தன. இதில் பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த சந்திரபாபு நாயுடு பெருவெற்றி பெற்றார். கூட்டணி குறித்து அலட்டிக்கொள்ளாத ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

கிங் மேக்கர் சந்திரபாபு நாயுடு
கிங் மேக்கர் சந்திரபாபு நாயுடு

மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாஜகவுக்கு, இம்முறை தனிப்பெரும்பான்மை கிட்டாததில் கூட்டணி கட்சிகளை அதிகம் நம்பியுள்ளது. அவர்களில் முக்கியமானவராக சந்திரபாபு நாயுடு முக்கியத்துவம் பெற்றுள்ளார். இந்த வகையில் நடப்பு மத்திய அரசையும், ஆட்சியையும் தீர்மானிப்பதில் மீண்டும் கிங் மேக்கர் அவதாரம் எடுத்திருக்கிறார். மாநிலத்திலும் மத்தியிலுமாக சந்திரபாபு நாயுடு விஸ்வரூபம் எடுத்ததில், அவரது தெலுங்கு தேசம் கட்சியினர் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர்.

வயது முதிர்ந்த சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைத்து அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினர் மீது ஆத்திரத்தில் இருந்த அவர்கள், தற்போது தங்களது அதிகார ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்ததாக அலறுகின்றனர். அவை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இவை தொடர்பாக மாநில ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, ’ஆட்சியில் அமரும் முன்னரே அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சியினரால், எங்கள் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. ஒய்எஸ்ஆர் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அரசு சொத்துக்களோடு, பலரது தனியார் சொத்துக்களும் குறிவைத்து சேதம் விளைவிக்கப்படுகின்றன. எனவே ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக சந்திரபாபு நாயுடுவை முன்னின்று கைது செய்த டிஜிபி அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி, அமெரிக்காவுக்கு தப்பியோடியதும் அங்கே அதிகாரிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in