பாஜகவை விடவும் அதிக வாக்கு சதவீதம்: ஆனாலும் ஒடிசாவில் தோல்வியடைந்த பிஜு ஜனதா தளம்; அதிர்ச்சி புள்ளிவிவரம்!

நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை விடவும் அதிக வாக்கு சதவீதம் பெற்றிருந்தபோதும், ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் குறைவான தொகுதிகளை வென்று தோல்வியடைந்துள்ளது.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் பிஜு ஜனதா தளம் - பாஜக இடையே கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் இக்கூட்டணி உடைந்தது. மேலும் இந்த இரு கட்சிகள் இடையே எதிரும் புதிருமான போட்டி வெடித்தது. முதலில் ஆளுங்கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்யத் தொடங்கிய பாஜக தலைவர்கள், பிறகு நவீன் பட்நாயக்கின் வலதுகரம் என்றும், அரசியல் வாரிசு என்றும் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனைக் குறிவைத்து, `ஒடிசாவை தமிழர் ஆள விடக்கூடாது' என்று வலியுறுத்தினர். வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு அல்ல என்று வெளிப்படையாக தெரிவித்த நவீன் பட்நாயக், தன்னுடைய உடல்நலம் குறித்து 10 ஆண்டுகளாக பாஜக வதந்தி பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

நவீன் பட்நாயக் விகே பாண்டியன்
நவீன் பட்நாயக் விகே பாண்டியன்

இந்த சூழலில் ஒடிசா சட்டப்பேரவை முடிவுகளின்படி, மொத்தமுள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்கிறது. பாஜகவுக்கு அடுத்தபடியாக ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களைப் பிடித்தது. மேலும் காங்கிரஸ் கட்சியானது 14 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் அதிர்ச்சி தரும் சட்டப்பேரவைத் தேர்தல் புள்ளிவிவரங்களின்படி, வாக்கு சதவீத அடிப்படையில் இப்போது பிஜு ஜனதா தளமே முதலிடத்தில் உள்ளது. பிஜேடிக்கு 40.22 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 40.07 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கும் 13.26 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றும் பிஜேடி கட்சி ஆட்சியை இழந்தது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மூன்றாம் முறையாக வென்ற மோடி
மூன்றாம் முறையாக வென்ற மோடி

சட்டப்பேரவை மட்டுமின்றி, மத்தியில் இப்போது பாஜக ஆட்சி அமையவே முக்கிய காரணமாகியிருக்கிறது ஒடிசா. ஏனென்றால் ஒடிசாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளை மொத்தமாக அள்ளியிருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வென்றுள்ளது. ஒருவேளை ஒடிசாவில் பாஜகவுக்கு 10 தொகுதிகள் குறைந்திருந்தால்கூட பாஜக இப்போது ஆட்சியமைப்பதில் சிக்கல் எழுந்திருக்கும்.

ஆனால் ஒடிசா மக்களவைத் தேர்தல் வாக்குசதவீதம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மாறாக உள்ளது. இதில் பாஜகவுக்கு 45.34 சதவீத வாக்குகளும், பிஜேடிக்கு 37.53 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 12.52 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

கடந்த 2019-ல் நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில் 112 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சி அமைத்தது. பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. அப்போதைய மக்களவைத் தேர்தலில் பிஜேடி 12 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றிருந்தது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in