டெல்லியில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள பல பகுதிகளில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை நீடித்து வருகிறது. போதிய தண்ணீர் விநியோகமின்றி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். டேங்கர் லாரிகளில் வரும் தண்ணீரை பொதுமக்கள் குடங்களுடன் கூட்டம் கூட்டமாக ஓடிச்சென்று தண்ணீருக்கு அடித்துக்கொள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது.
மேலும், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அருகில் உள்ள ஹரியாணா, இமாச்சல பிரதேச மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு தண்ணீர் கொண்டு வர உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் டெல்லியின் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில் டெல்லி தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையை கண்டித்து ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பாஜக நேற்று மண் பானையை உடைத்து நேற்று போராட்டம் நடத்தியது. அப்போது, சத்தர்பூரில் உள்ள டெல்லி ஜல் போர்டு அலுவலகம் மர்ம நபர்களால் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பாஜகவினர் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு பாஜகதான் காரணம் ஆம் ஆத்மி எம்.பி- சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: “டெல்லியில் பாஜகவால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என நான் சொல்கிறேன். டெல்லி மக்களுக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என பாஜக விரும்புகிறது.
அதற்காக அனைத்து சதிகளையும் செய்கிறது. தேவைக்கேற்ப நமக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. நாங்கள் ஹரியானா அரசிடம் கோரிக்கை வைத்தாலும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. துணை நிலை ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை." இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பில் இருந்து உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் வாசிக்கலாமே...
திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்
சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!
5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!