ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நவீன்பட்நாயக் அரசியல் வாரிசாக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் உயர்ந்துள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில், 'ஒடிசாவை தமிழர் ஆள்வதா என பாஜக மூத்த தலைவர் அமித் ஷா வெளிப்படையாகவே பேசினார்.

அமித் ஷா, பிரதமர் மோடி
அமித் ஷா, பிரதமர் மோடி

இதேபோல், பிரதமர் மோடியும் இன ரீதியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் அம்மாநில பாஜக வீடியோக்கள் வெளியிட்டது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தமிழர்களை குறிப்பிட்டு, பாஜக தலைவர்கள் எதிர்மறையாக பிரச்சாரம் செய்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்! அறிந்தவர்கள்! ஒரு தமிழன்‌ ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!

நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.

வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது. உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள்! என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது? கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான ரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர்.

தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர். ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்!”

இவ்வாறு அந்த பதிவில் டி.ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in