இன்றிரவோடு முடிவுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள்... அரசின் உற்சாக அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்பு!

தமிழக அரசு
தமிழக அரசு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவுபெறுவதை ஒட்டி, தமிழக அரசின் உற்சாக அறிவிப்புகள் பலதும் அதைத் தொடர்ந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. புதுச்சேரியையும் உள்ளடக்கி, 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்திய அரசியலை அதிர்வுக்குள்ளாக்கியது. அதிலும் அறுதிப் பெரும்பான்மைக்கான வாய்ப்பை இழந்தபோதும் வடக்கு முதல் தெற்கு வரை பரவலான வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளதன் மத்தியில், தமிழகத்தில் அதற்கான வாய்ப்பை திமுக கூட்டணி துடைத்தெறிந்து உள்ளது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லவும், மக்களின் ஆதரவு அபிமானத்தை எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கி இட்டுச் செல்லவும் திமுக முடிவாக உள்ளது. இதன் பொருட்டு விரைவில் பல அதிரடித் திட்டங்களை அறிவிக்கவும், நிலுவையில் இருக்கும் கோரிக்கைகள் பலவற்றை தீர்க்கவும் திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக படுதோல்வி அடைந்திருக்கும் சூழலில், அவற்றுக்கு காரணமான வாக்காளர்களை கௌரவிக்கவும் திமுக விரும்புகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட கடந்த மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அத்தியாவசியங்கள் தவிர்த்து அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு இதன் மூலம் தடை விதிக்கப்பட்டது. 7 கட்டமாக அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு நடைமுறைகளில், முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்.19 அன்றே தேர்தல் முடிவடைந்தது. இதனால் எஞ்சிய 6 கட்டத் தேர்தல்கள் முடியும் வரை, அமலில் இருக்கும் கடுமையான தேர்தல் நடத்தைகளுக்கு, தமிழகத்தின் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள்
தேர்தல் நடத்தை விதிகள்

கடும் கோடையில் தண்ணீர் பந்தல் திறக்கக்கூட முடியவில்லை என திமுக அமைச்சர்கள் புலம்பினர். இதனையடுத்து, மாநிலத்தின் உள்மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகளில் சில தளர்வுகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனபோதும் அரசின் நலத்திட்ட அறிவிப்புகள் உள்ளிட்டவைக்கு தடை தொடர்ந்தது. இந்த சூழலில் இன்று இரவுடன் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவுக்கு வருகின்றன.

இதனையடுத்து தமிழக அரசு கிடப்பிலிருக்கும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளோடு, புதிய சிலவற்றையும் வெளியிட இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. வாக்களித்த மக்களுக்கான நன்றி பாராட்டும் விதமாகவும் அவை இருக்கும் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகளும் எகிறிக் கிடக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in