ஆறு நாட்கள் தாமதம்... ஆட்சிப் பொறுப்பேற்ற மோடிக்கு ஒருவழியாக வாழ்த்து பகிர்ந்தார் பாகிஸ்தான் பிரதமர்

மோடி - ஷெபாஸ் ஷெரீப்
மோடி - ஷெபாஸ் ஷெரீப்

அண்டை தேசமான இந்தியாவில் பிரதமராக மூன்றாம் முறையாக பதவியேற்றிருக்கும் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆறு நாட்கள் தாமதமாக வாழ்த்து பகிர்ந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி நேற்று பொறுப்பேற்றார். பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவுகள், மொரீஷியஸ் என அண்டை நாடுகளின் தலைவர்கள் நேரிடையாக மோடி பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்திருந்தனர். அண்டை தேசங்களுக்கு அப்பாலான பல நாடுகள் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை பகிர்ந்து இருந்தன. ஆனால் பங்காளி தேசமான பாகிஸ்தான் கனத்த அமைதியில் ஆழ்ந்திருந்தது.

மோடி பதவியேற்பு
மோடி பதவியேற்பு

நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் பாஜகவின் பிரச்சார வியூகத்தில் பாகிஸ்தானுக்கு முக்கிய இடம் தந்திருந்தது. பாகிஸ்தான் எதிர்ப்பு மட்டுமன்றி பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் பாகிஸ்தான் சார்பை முன்வைத்தும் தீவிர பிரசாரத்தை பாஜக மேற்கொண்டது. மோடி மூன்றாம் முறையாக வெற்றி பெற்ற 6 மாதங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை போரிட்டு மீட்பார் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்கமாக அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கானது என அசாம் பாஜக முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா கிண்டலடித்தார். இந்தியாவுக்கு எதிரானவர்கள் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பின் அதன் எல்லைக்குள் புகுந்து தாக்குவோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதுதவிர்த்து மோடி, அமித் ஷா போன்றவர்களின் பிரச்சாரங்களிலும் பாகிஸ்தான் எதிர்ப்பே பிரதானமாக இருந்தது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகளில் பாஜகவின் பங்கு குறித்து பேசாது, சதா ராமர் கோயில், பாகிஸ்தான் என்றே பாஜக கூப்பாடு போடுவதக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இதற்கு பதிலடியாக ராகுல் காந்திக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கிறது என்றும் பாஜக தலைவர்கள் பேசினார்கள். அதற்கொப்ப, பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மோடி வெற்றிக்கு எதிராகவும், ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோருக்கு ஆதரவாகவும் சமூக ஊடக கருத்துக்களை பகிர்ந்தது சர்ச்சையானது. ஒட்டுமொத்தமாக மோடி தோல்வியை எதிர்பார்த்திருந்த பாகிஸ்தானுக்கு இந்திய பொதுத்தேர்தல் முடிவில் அதிர்ச்சி காத்திருந்தது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

தனிப்பெரும்பான்மை கிட்டாது போனாலும், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தனது மூன்றாவது ஆட்சியை மோடி அமைத்துள்ளார். பாஜக தலைமையிலான ஆட்சி என்றதுமே உலக நாடுகள் தரப்பிலிருந்து வாழ்த்துகள் வெளியாயின. ஆனால் பாகிஸ்தான் அமைதி காத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி அதிகாரபூர்வமாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரே எங்களால் கருத்து சொல்ல முடியும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் தந்தனர்.

பாகிஸ்தான் பிரதமரின் சுருக்கமான வாழ்த்து
பாகிஸ்தான் பிரதமரின் சுருக்கமான வாழ்த்து

முடிவாக நேற்று மாலை மோடி பதவியேற்ற பின்னர் இன்று மதியம், பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து எக்ஸ் தளத்தில் ஒருவரி வாழ்த்து வெளியாகி இருக்கிறது. ‘இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்’ என்ற சுருக்கமான வாழ்த்து அதில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இழுபறியில் உள்ள இந்தியா பாகிஸ்தான் உறவு, மோடியின் மூன்றாவது ஆட்சியின் தொடக்கமாக சுணக்கத்துடனே ஆரம்பித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in