திருநெல்வேலியில் சமோசா கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி நகர்ப்பகுதியில் வடகரை வீதி முக்கிய வர்த்தக பகுதியாக இருந்து வருகிறது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள் அடுத்தடுத்து நெருக்கமாக அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதியில் மாரியப்பன் என்பவர் சமோசா கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த சமோசாக்களைப் போடுவதற்காக சிலிண்டரையும் அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இன்று வழக்கம் போல் கடையில் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென அடுப்பிலிருந்த தீ பரவி, தள்ளுவண்டியில் தீப்பிடித்து உள்ளது.
இதனை அணைக்க மாரியப்பன் மற்றும் அருகில் இருந்தவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க அவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் மாரியப்பன் உட்பட மூவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக சிலிண்டர் வெடித்த போது அருகில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் சமோசா கடையின் அருகில் இருந்த சில கடைகளுக்கும் தீ பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பெரும் பொருளாதார சேதமும் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக வடகரை வீதி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பெரும் பரபரப்பும் நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்
கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!
மீண்டும் மீண்டும் வழக்கு... மதுரையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!
பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவில் விபரீதம்: பட்டாசு வெடித்ததில் 15 பேர் படுகாயம்